சாம்பியன்ஸ் டிராபி: நியூசிலாந்தை வீழ்த்தி வங்கதேச அணி அபார வெற்றி

Sat 10th Jun, 2017 Author: Kumar Prince Mukherjee

ICC Champions Trophy

கார்டிப்: சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் 9-வது ஆட்டத்தில் நியூசிலாந்து, வங்காளதேச அணிகள் விளையாடின. பரபரப்பன ஆட்டத்தில் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணி அபார வெற்றி பெற்றது.

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் 9-வது ஆட்டம் கார்டிப் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில், குரூப் ஏ பிரிவில் உள்ள நியூசிலாந்து, வங்காளதேச அணிகள் விளையாடின. டாஸ் வென்று முதலில் ஆடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 265 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ராஸ் டெய்லர் 63 ரன்கள் எடுத்தார். கேப்டன் வில்லியம்சன் 57 ரன்கள் அடித்தார்.

வங்காளதேசம் தரப்பில் மொசாடெக் உசைன் 3 விக்கெட்டுகளும், டஸ்கின் அகமது 2 விக்கெட்டும் எடுத்தனர். அதன்பின்னர் 266 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்காளதேச அணிக்கு ஆரம்பமே சறுக்கியது. துவக்க வீரர்கள் தமிம் இக்பால் ரன் எதுவும் எடுக்காமலும், சவுமியா சர்க்கார் 3 ரன்களிலும் சவுத்தி ஓவரில் எல்.பி.டபுள்யூ. ஆகி வெளியேறினர்.

இந்த சூழ்நிலையில் சாகிப் அல் அசன், மஹ்முதுல்லா ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்து வந்தனர். நிதானமாக விளையாடி வந்த நிலையில் சாகிப் அல் அசன் 114 ரன்களில் அவுட் ஆனார். 

இறுதியில் மஹ்முதுல்லா ஆட்டமிழக்காமல் 102 ரன்களை குவித்தார்.நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ள வங்கதேச அணி சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் அரைஇறுதி போட்டிக்கு செல்லும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.