ஐ.பி.எல்: பெங்களூர் அணியை வீழ்த்தி குஜராத் லயன்ஸ் அபார வெற்றி!

Fri 28th Apr, 2017 Author: Kumar Prince Mukherjee

Indian premier league 2017

பெங்களூர்: ஐ.பி.எல். தொடரில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் லயன்ஸ் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஐ.பி.எல். தொடரின் இன்றையை லீக் ஆட்டத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ், குஜராத் லயன்ஸ் அணிகள் மோதின. பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் ரெய்னா முதலில் பந்து வீச தீர்மானித்தார். இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 134 ரன்கள் மட்டுமே எடுத்தது. பெங்களூர் அணியில் அதிகபட்சமாக நெகி (32), ஜாதர் யாதவ் (31) ரன்கள் எடுத்தனர்.

அதிரடி ஆட்டக்காரர்களான கேப்டன் விராட் கோலி, கெயில் மற்றும் டிவில்லியர்ஸ் ஆகிய மூவரும் சொற்ப ரன்களில் மீண்டும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். குஜராத் அணியில் டையி 4 ஓவர்களில் 12 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்தார். ஜடேஜா 2 விக்கெட்டுகளை எடுத்தார்.

இதனையடுத்து 135 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி 28 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இருப்பினும் கேப்டன் ரெய்னா மற்றும் பிஞ்ச் இருவரும் ஜோடி சேர்ந்து ரன்களை குவித்தனர். ரெய்னா நிதானமாக ஆட பிஞ்ச் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார். 

பிஞ்ச் 34 பந்துகளில் 72 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவர் 6 சிக்ஸர்களை விளாசினார். பின்னர் ரெய்னா பவுண்டரிகளாக விளாசி வெற்றியை உறுதி செய்தார். ரெய்னா 30 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். குஜராத் அணி 1.5 ஓவர்களில் 135 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 37 பந்துகள் மீதமிருந்த நிலையில் குஜராத் அணி வெற்றி பெற்றுள்ளது.

3 முக்கிய விக்கெட்டுகளை சாய்த்த டையி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 8 போட்டிகளில் விளையாடி உள்ள குஜராத் அணி 3-வது வெற்றியை பதிவு செய்துள்ளது. 9 போட்டிகளில் விளையாடியுள்ள பெங்களூர் 7-வது 6 வது தோல்வியை சந்தித்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்துக்கு சென்றது.