ஐ.பி.எல் : ஐதராபாத் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் வெற்றி

Fri 14th Apr, 2017 Author: Kumar Prince Mukherjee

Indian Premier League 2017

மும்பை: ஐ.பி.எல் சீசன் 10-ன் 10-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது.மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்களை எடுத்தது. ஐதராபாத் அணியில் அதிகபட்சமாக வார்னர் 49 ரன்களும், தவான் 47 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். மும்பை அணி சார்பில் பும்ப்ரா அதிகபட்சமாக மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.இதையடுத்து 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய மும்பை அணியின் பார்த்திவ் படேல் தொடக்கத்தில் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோர் உயரத் தொடங்கியது. பார்த்திவ் படேல் 24 பந்துகளில் 7 பவுண்டரிகள் உட்பட 39 ரன்களை குவித்தார். பட்லர் 14 (11) ரன்களும், ரோகித் ஷர்மா 4 (4) ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இதையடுத்து ஜோடி சேர்ந்த ராணா மற்றும் க்ரூனல் பாண்டியா கூட்டணி அதிரடி காட்ட மும்பையின் ஸ்கோர் வேகம் அதிகரிக்கத் தொடங்கியது.ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 3 பவுண்டரி 3 சிக்சர்கள் விளாசிய க்ரூனல் பாண்டியா 37 ரன்கள் எடுத்திருந்த போது புவனேஷ்வர் குமார் பந்து வீச்சில் பென் கட்டிங்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். க்ரூனலை தொடர்ந்து ராணா 35 பந்துகளில் 3 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 45 ரன்கள் எடுத்திருந்த போது புவனேஷ்வர் பந்தில் போல்டானார். இறுதியில் மும்பை அணி 18.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது. ஐதராபாத் அணி சார்பில் புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.