ஐ.பி.எல்: பஞ்சாப் அணியை வீழ்த்தி சன்ரைசர்ஸ் 5-வது வெற்றி

Sat 29th Apr, 2017 Author: Kumar Prince Mukherjee

Indian premier league 2017

மொகாலி:  ஐ.பி.எல். தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்ற 33-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. முதலில் பேட் செய்த ஐதராபாத் அணி நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் குவித்தது. அந்த அணியில் தவாண்(77), வில்லியம்சன்(54), வார்னர்(51) ஆகியோர் அரைசதம் விளாசினர். 

பின்னர் 208 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணியில் 3 ரன்களுக்கு வோக்ரா ஆட்டமிழந்தார். சிறிது நேரம் அதிரடி காட்டிய குப்டில் 11 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்த களமிறங்கிய மேக்ஸ்வெல் சந்தித்த 2-வது பந்தில் டக் அவுட் ஆகி வெளியேறினார். 

விக்கெட்டுகள் ஒரு புறம் விழுந்தாலும் ஷான் மார்ஸ் மட்டும் நிலைத்து நின்று அதிரடி காட்டினார். ஆனால் அவருக்கு எந்தவீரரும் ஒத்துழைப்பு அளிக்கவில்லை. மோர்கன் மட்டும் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடிய மார்ஸ் 50 பந்துகளில் 84 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மார்ஸ் ஆட்டமிழந்ததும் அந்த அணியின் தோல்வி கிட்டத்தட்ட உறுதி ஆனது. 

இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் மட்டும் எடுத்தது. இதனால் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐதராபாத் அணியில் நெக்ரா மற்றும் கவுல் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர். அந்த அணியின் ரஷித் கான் 4 ஓவர்கள் வீசி 16 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார்.

ரஷித் கானுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இதுவரை 9 போட்டிகளில் விளையாடியுள்ள ஐதராபாத் அணி தனது 5-வது வெற்றியை பதிவு செய்துள்ளது. 8 போட்டிகளில் விளையாடியுள்ள பஞ்சாப் தனது 5-வது தோல்வியை அடைந்தது