ஐ.பி.எல். போட்டிகளில் பட்டையை கிளப்பும் ‘டிராவிட் படை’..!!

Sat 13th May, 2017 Author: Kumar Prince Mukherjee

Indian premier league 2017

நிதானமாக ஆடக்கூடிய டிராவிட் தான், இந்த வருட ஐ.பி.எல்.போட்டிகளில் அதிரடி காட்டும் இளம் வீரர் களின் குரு. இந்திய ‘அண்டர்-19’ அணியை வழி நடத்தி செல்லும் டிராவிட், அதில் விளையாடும் வீரர்களை அதிரடி வீரர்களாகவும் மாற்றி வருகிறார். அதுபற்றி... சிஷ்யர்கள் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்...!

“கிரிக்கெட் விளையாட்டை யார்வேண்டுமானாலும் விளையாடலாம். ஆனால் உனக்கான அங்கீகாரத்தை பெற, வித்தியாசமாக விளையாடவேண்டும் என்பதே குருவின் தாரக மந்திரம்” என்று வார்த்தைகளால் சிக்சர் விளாசுவது, டெல்லி அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ரிஷப் பாண்ட்.

“ஊருக்கு தான் டிராவிட் நிதானமானவர், ஆனால் அவரது பயிற்சிமுறை மந்தமானவர்களை யும் அதிரடியாக விளையாட வைத்துவிடும். ‘சவால்’ விடுவதிலும், சவாலில் மாணவர்களை ஜெயிக்க வைப்பதிலும் டிராவிட் கெட்டிக்காரர். மட்டையை ஒழுங்காக பிடிக்க தெரியாதவர்களையும், சிக்சர் அடிக்கவைக்கும் மந்திரத்தை சரிவர படித்துவைத்திருக்கிறார். அவரது மந்திரத்தில் தான் நாங்கள் அதிரடி காட்டுகிறோம். டிராவிட்டை பொருத்தவரையில் கிரிக்கெட் பயிற்சி என்பது பரீட்சையுடன் தான் முடிவுக்கு வரும். அவர் வைக்கக்கூடிய சிக்சர் பரீட்சையில் ஜெயித்தால் மட்டுமே ஓய்வு கிடைக்கும். இல்லையேல் இரவிலும் பயிற்சி தான்” என்று சுவாரசியமாக பேசும் ரிஷப் பாண்ட், டிராவிட்டின் செல்லப்பிள்ளை. டிராவிட்டின் சவால்களை எதிர்கொள்வதில் கெட்டிக்காரர்.

“6 பந்தில் 6 சிக்சர்... என்பது தான் குருவின் இறுதிகட்ட பரீட்சை. இதில் என்னைத் தவிர மற்ற அனைவருமே தேறிவிட்டனர். அதனால் டிராவிட்டுடன் அதிகமாக பேசக்கூடிய வாய்ப்பும், பழகக்கூடிய சந்தர்ப்பமும் எனக்கு கிடைத்தது. அப்போது தான் யார்கர் பந்திலும் சிக்சர் அடிக்கக்கூடிய வித்தைகளை கற்றுக்கொடுத்தார். அந்த வித்தை ஐ.பி.எல்.போட்டிகளில் கைக்கொடுக்கிறது” என்று ஜாலியாக பேசும் ரிஷப் பாண்ட்டுக்கு டிராவிட்டின் மூலம், கோவா சுற்றிப்பார்க்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

“உள்ளூர் போட்டிகளில் எனக்கும், ராணாவிற்கும் இடையே ரன் குவிக்கும் போட்டி நடந்துக்கொண்டிருந்தது. எல்லா போட்டிகளிலும் நாங்கள் சரிசமமாக ரன்களை குவித்துக்கொண்டிருந்தோம். அப்போது இருவரில் யார் அதிகமாக ரன் எடுக்கிறார்களோ, அவர் களுக்கு ஒரு கிரிக்கெட் மட்டையுடன், கோவா பயணமும் பரிசாக கிடைக்கும் என்று உசுப்பேற்றிவிட்டார். அதிலிருந்து எங்களது ஆட்டம் வெறியாட்டமாக மாறிவிட்டது. 

அந்த ஆட்டத்தில் ராணா சிக்சர் அடித்தால் பதிலுக்கு நானும் சிக்சர் அடிப்பேன். இப்படியே ஒருவழியாக உள்ளூர் போட்டிகள் முடிவுக்கு வந்தன. என்னைவிட ராணா, 10 ரன்கள் அதிகமாக எடுத்திருந்தான். சொன்னபடியே டிராவிட் கிரிக்கெட் மட்டையையும், கோவாவிற்கான டிக்கெட்டையும் கொடுத்தார். யாருக்கு தெரியுமா...? டெல்லி அணிக்காக விளையாடிய ஒட்டு மொத்த கிரிக்கெட் அணிக்கே கொடுத்துவிட்டார். மாணவர்களை ஊக்கப்படுத்துவது என்றால் டிராவிட்டிற்கு அவ்வளவு பிடிக்கும்” என்பவர், ஆசிரியர் தினத்தில் அரங்கேறிய நெகிழ்ச்சியான சம்பவத்தையும் பகிர்ந்துகொண்டார்.

“ஆசிரியர் தினத்தன்று நாங்கள் அனைவருமே ஒன்றாக டெல்லி மார்க்கெட்டிற்கு சென்றோம். அன்றைய தினத்தில் ஆசிரியர்களுக்கு பிரத்தியேக மாலையை அணிவிப்பது வழக்கம். அதனால் அனைவரும் ஆளுக்கொரு மாலை வாங்கி வந்து, அதை ஒன்றாகத் திரித்து ஒரே மாலையாக மாற்றி டிராவிட்டிற்கு அணிவித்தோம். அவர், கண் கலங்கிவிட்டார். பிறகு அன்று முழுவதும் மாணவர்களாகிய நாங்கள் அனைவரும் பந்து வீசி ஆசிரியருக்கான மரியாதையை தெரிவித்தோம்” என்று குரு- சிஷ்ய பந்த பாசத்தை விளக்கினார்.

“நானும், ரிஷப் பாண்ட்டும் ஒரே ஊர்க்காரர்கள். ஏன் ஒரே காலனியில் வசிப்பவர்கள். எனக்கு கிரிக்கெட் விளையாட சொல்லிக் கொடுத்ததே ரிஷப் தான். ஆனால் இன்று நாங்கள் எதிர் எதிர் அணிகளில் விளையாடுகிறோம். சொல்லி வைத்ததை போன்றே நான், ரிஷப், சஞ்சு சாம்சன் மற்றும் இஷான் கிஷான் என ஒருவர் பின் ஒருவராக அரைசதம் அடித்தோம். இது ஒரு நல்ல ஆரம்பம் தான். நான் மும்பை அணிக்காக விளையாடுகிறேன். எங்களுக்கான பயிற்சிகளை கிரிக்கெட்டின் கடவுளாக வர்ணிக் கப்படும் சச்சின் தெண்டுல்கர் கவனித்து கொள்கிறார். அந்த நிலையிலும் மனம் டிராவிட்டைதான் தேடுகிறது. அடுத்த வருடமாவது, டிராவிட் இருக்கும் அணியில் இடம் கிடைக்க வேண்டுகிறேன்” என்று உருவாக்கமாக பேசு கிறார், நித்தீஷ் ராணா.
மும்பையின் அதிரடி ஆட்டக்காரர், டிராவிட் என்ற தாரக மந்திரத்தால் டெல்லி அணிக்கு துதிபாடுகிறார்.