ஐ.பி.எல்: கொல்கத்தாவை வீழ்த்தியது ஐதராபாத்

Mon 1st May, 2017 Author: Kumar Prince Mukherjee

Indian premier league 2017

ஐதராபாத்: ஐ.பி.எல் தொடரின் இன்றைய போட்டியில் வார்னரின் அதிரடி சதத்தால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 48 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வீழ்த்தியது.

ஐ.பி.எல். தொடரில் இன்றைய 2-வது ஆட்டம் ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி ஐதராபாத் அணியின் வார்னர், தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

தவான் ஒருபுறம் நிதானமாக விளையாட மறுபுறம் வார்னர் ருத்ரதாண்டவம் ஆடினார். 2-வது ஓவரில் ஒரு சிக்ஸ் உடன் 10 ரன்கள் குவித்த வார்னர், கிறிஸ் வோக்ஸ் வீசிய 3-வது ஓவரில் தலா ஒரு சிக்ஸ், பவுண்டரி மூலம் 11 ரன்கள் சேர்த்தார். யூசுப் பதான் வீசிய 4-வது ஓவுரில் இரண்டு பவுண்டரி, ஒரு சிக்சர் உடன் 17 ரன்கள் சேர்த்தார்.

6-வது ஓவரை குல்தீப் யாதவ் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் தவான் கொடுத்த ஸ்டம்பிங் வாய்ப்பை உத்தப்பா சரியாகபயன்படுத்தவில்லை இந்த ஓவரில் ஐதராபாத் அணி 12 ரன்கள் சேர்க்க பவர் பிளேயான முதல் 6 ஓவரில் 79 ரன்கள் குவித்தது.குல்தீப் யாதவ் வீசிய 10-வது ஓவரில் இரண்டு சிக்ஸ், ஒரு பவுண்டரி விளாசி 98 ரன்னைத் தொட்டார் வார்னர். 11-வது ஓவரின் கடைசி பந்தில் இரண்டு ரன்கள் எடுத்து சதத்தை பதிவு செய்தார். வார்னர். 43 பந்தில் 7 பவுண்டரி, 8 சிக்சருடன் சதம் அடித்தார்.

மறுமுனையில் விளையாடிய தவான் 30 பந்தில் 29 ரன்கள் எடுத்த நிலையில் ரன்அவுட் ஆனார். அப்போது ஐதராபாத் அணி 13 ஓவரில் 139 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து கேன் வில்லியம்சன் களம் இறங்கினார். சுனில் நரைன் வீசிய 16-வது ஓவரில் தொடர்ச்சியாக மூன்று பவுண்டரிகள் அடித்த வார்னர், 17-வது ஓவரில் அவுட் ஆனார். அவர் 59 பந்தில் 10 பவுண்டரி, 8 சிக்சர் உடன் 126 ரன்கள் சேர்த்தார்.கேன் வில்லியம்சன் அதிரடியாக விளையாட சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் குவித்தது.

பின்னர் 210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சுணில் நரைன் மற்றும் காம்பீர் பேட்டிங் செய்தனர். 1 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் நரைன் கேட்ச் ஆனார். அந்த அணியின் கேட்பன் காம்பீர் 11 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார். 

இதனையடுத்து களமிறங்கிய உத்தப்பா அதிரடியாகவும், பொறுப்புடனும் செயல்பட்டு ஆடினார். 28 பந்துகளில் 4 பவுண்டரிகள், 4 சிக்சர்களுடன் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆட்டத்தின் 7-வது ஓவரில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் சிறிது நேரம் தடைபட்டது. பின்னர், மழை நின்றதும் கொல்கத்தா அணியினர் பேட்டிங்கை தொடர்ந்தனர்.

வெற்றி இலக்கு அதிகமாக இருந்தாலும் அதிரடி வீரர்கள் சீக்கிரமே ஆட்டமிழந்ததால் பின்வரிசை வீரர்கள் ரன்களை எடுக்க மிகவும் சிரமப்பட்டனர். 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 7 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. ஐதராபாத் அணி தரப்பில் புவனேஷ்வர் குமார், முகம்மது சிராஜ், கவுல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனால், 48 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது. அந்த அணியில் அதிரடி சதமடித்த கேப்னர் வார்னர் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.