மூன்றாவது ஒருநாள் போட்டி.. இந்தியா 93 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி

Sat 1st Jul, 2017 Author: Lokesh Dhakad

Indian cricket team

ஆண்டிகுவா: மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 93 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 

இந்திய அணி, தற்போது மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து, 5 ஒருநாள் போட்டிகள், 1 டி20 போட்டியில் விளையாடுகிறது. முதல் ஒருநாள் போட்டி, மழை காரணமாகக் கைவிடப்பட்டது. 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 105 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் 3வது ஒரு நாள் போட்டி ஆண்டிகுவாவில் உள்ள விவியன் ரிச்சர்ட்ஸ் ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் ஜேசன் ஹோல்டர் பீல்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரஹானே, ஷிகர் தவான் இறங்கினர். 3-வது ஒவரிலேயே கம்மின்ஸ் வீசிய பந்தில் தவான் 2 ரன்னில் அவுட்டாகி வெளியேறினார்.

விராட் கோஹ்லி 9 வது ஓவரில் ஹோல்டர் பந்துவீச்சில் 11 ரன்களுக்கு அவுட்டானார். இதனால் இந்திய அணி முதல் 10 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 34 ரன் எடுத்து தடுமாறியது. அதன்பின், ரஹானேவுடன் ஜோடி சேர்ந்தார் யுவராஜ் சிங். இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 39 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தேவேந்திர பிஷு வீசிய 27வது ஓவரில் யுவராஜ் சிங் அவுட்டாகினார்.

சிறப்பாக ஆடிய ரஹானே 112 பந்துகளில் நான்கு பவுண்டரி ஒரு சிக்சர் அடித்து 72 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். டோணி 79 பந்துகளில் 78 ரன்களை குவித்தார், இதில் 4 சிக்சர், 2 பவுண்டரி அடங்கும், கேதர் ஜாதவ் அதிரடியாக விளையாடி 26 பந்துகளில் 40 ரன்களை குவித்தார். 4 பவுண்டரி 1 சிக்சர் உதவியுடன் இந்த ரன்களை அவர் குவித்தார். ஆட்ட நேர இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 251 ரன்களை எடுத்தது.

252 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மேற்கிந்திய தீவுகள் அணி அடுத்து களமிறங்கியது. அந்த அணியில் அதிகபட்சமாக முகமது 40 ரன்னும், ரோவ்மேன் போவெல் 30 ரன்னும் எடுத்தனர். 38.1 ஓவரில் அந்த அணி அனைத்து விக்கெட்டையும் இழந்து 158 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 93 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. இந்திய அணியின் அஸ்வின், குல்தீப் யாதவ் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.