ஒரே நாளில் சதமடித்து சாதனை படைத்த 4 இந்திய வீரர்கள்

Sat 27th May, 2017 Author: Kumar Prince Mukherjee

india vs bangladesh

பத்து ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் (மே 25, 2007) வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியைச் சேர்ந்த 4 வீரர்கள் ஒரே நாளில் சதமடித்து சாதனை படைத்தனர்.

டாக்காவில் நடந்த டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் இன்னிங்ஸை தினேஷ் கார்த்திக் மற்றும் வாசிம் ஜாஃபர் தொடங்கினர். முதல் விக்கெட்டுக்கு 175 ரன்கள் குவித்த நிலையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த தினேஷ் கார்த்திக், தசைப்பிடிப்பு காரணமாக ரிட்டையர்ட் ஹர்ட்டாகி வெளியேறினார். இதையடுத்து ஜாஃபருடன், டிராவிட் கைகோர்த்தார். இருவரும் வங்கதேச பந்துவீச்சை திறம்பட சமாளித்த வாசிம் ஜாஃபர் சதமடித்து அசத்தினார். சதமடித்த சிறிதுநேரத்திலேயே உடல்நலக்குறைவால் ஜாஃபரும் ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் பெவிலியன் திரும்பினார். இதையடுத்து களமிறங்கிய சச்சினும், டிராவிட்டுடன் இணைந்து நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருவரும் சதமடிக்க, இந்திய அணி ஸ்கோர் வேகமாக உயர்ந்தது.

தினேஷ் கார்த்திக் மற்றும் வாசிம் ஜாஃபர் ஆகிய இருவருமே ரிட்டையர்ட் ஹர்டாகி வெளியேறிதால் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி விளையாடி வந்தது. இதனால், முதல் விக்கெட்டுக்கு 413 ரன்கள் குவித்து சாதனை படைத்த வினோத் மன்கட் மற்றும் பங்கஜ் ராய் சாதனை முறியடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்திய அணியின் ஸ்கோர் 408 ஆக இருந்தபோது டிராவிட் ஆட்டமிழந்தார். இதையடுத்து மீண்டும் களமிறங்கிய தினேஷ் கார்த்திக்கும் சதமடித்து அசத்தினார். ஒரு டெஸ்ட் போட்டியின் ஒரே நாளில் 4 வீரர்கள் சதமடித்து சாதனை படைத்தது, அதுவே முதல் முறையாகும். இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் 610 ரன்கள் குவித்த இந்திய அணி, வங்கதேசத்தை இன்னிங்ஸ் மற்றும் 239 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. தினேஷ் கார்த்திக், 129 ரன்களும், வாசிம் ஜாஃபர் 138 ரன்களும், டிராவிட் 129 ரன்களும் எடுத்தனர். சச்சின் டெண்டுல்கர் ஆட்டமிழக்காமல் 122 ரன்கள் குவித்தார்.