எல்பிஎல் 2023: கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் வீழ்த்தி கலே டைட்டன்ஸ் அபார வெற்றி!
இலங்கையில் நடைபெற்றுவரும் லங்கா பிரீமியர் லீக் தொடரின் 4அவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்றுவரும் 20ஆவது லீக் ஆட்டத்தில் கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் - கலே டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற கலே அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய கொழும்பு அணிக்கு பதும் நிஷங்கா மற்றும் பாபர் ஆசாம் இணை தொடக்கம் கொடுத்தனர். ஆனால் இதில் நிஷங்கா 2 ரன்களிலுக், பாபர் ஆசாம் 6 ரன்களையும் எடுத்த நிலையில் லஹிரு குமாரா பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். அதன்பின் களமிறங்கிய லஹிரு உதானா 14, நிபுன் தனஞ்செயா 13, நுவனிந்து ஃபெர்னாண்டோ 14, முகமது நவாஸ் 11, இஃப்திகார் அஹ்மது 5, கேப்டன் சமீகா கருணரத்னே 2 ரன்களுக்கும் என வந்த வேகத்திலேயே விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
அவர்களை தொடர்ந்து களமிறங்கிய டெய்ல் எண்டர்களும் எதிரணி பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் ஆட்டமிழந்தனர். இதனால் கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணி 15.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 74 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கலே டைட்டன்ஸ் அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய தப்ரைஸ் ஷம்ஸி 4 விக்கெட்டுகளையும், சீகுகெ பிரசன்னா 3 விக்கெட்டுகளையும், லஹிரு குமாரா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதையடுத்து எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய கலே டைட்டன்ஸ் அணியில் பனுகா ராஜபக்ஷா 6 ரன்களிலும், லிட்டன் தாஸ் ஒரு ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த லசித் க்ரூஸ்புலே - ஷகிப் அல் ஹசன் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தனர்.
தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த க்ரூஸ்புலே 42 ரன்களையும், ஷகிப் அல் ஹசன் 17 ரன்களையும் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் கலே டைட்டன்ஸ் அணி 8.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 8 விக்கெட் வித்தியாசத்தில் கொழும்பு ஸ்டிரைக்கர்ஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.