நீங்கள் அனைவருக்கும் முன்மாதிரி - தினேஷ் கார்த்திக்கை புகழ்ந்த ஹர்திக் பாண்டியா!
நேற்று நடந்த தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 4ஆவது டி20 போட்டியில் இந்தியா 82 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நேற்றைய ஆட்டத்தில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிக்கு காரணமாக திகழ்ந்தார்.
தற்போது 37 வயதான அவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு அணியில் இடம்பெற்று டி20 போட்டியில் முதல் அரை சதத்தை பதிவு செய்தார். அந்த போட்டியில் 13ஆவது ஓவரில் இந்தியா 81/4 என்ற நிலையில் தடுமாறிக் கொண்டிருந்தது. அப்போது பேட்டிங் செய்து கொண்டிருந்த கேப்டன் ரிஷப் பந்த் மோசமான ஷாட் ஒன்றை விளையாடி 17 ரன்களில் அவுட்டானார்.
இதையடுத்து தினேஷ் கார்த்திக் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். தினேஷ் கார்த்திக் ஒன்பது பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்களை விளாசி அசத்தினார். பாண்டியா 31 பந்துகளில் 46 ரன்கள் ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இந்நிலையில் பிசிசிஐ வெளியிட்ட காணொளியில் கார்த்திக்குடனான தனது பழைய உரையாடல்களை ஹர்திக் குறிப்பிட்டு பேசினார். அதில்“அந்த உரையாடல்கள் எனக்கு நினைவிருக்கிறது. இந்தியாவுக்காக மீண்டும் விளையாடுவதே எனது இலக்கு என்றும், இந்த உலகக் கோப்பையில் விளையாடுவதே எனது குறிக்கோள் என்றும், அதற்கு எனது அனைத்தையும் கொடுக்கப் போகிறேன் என்றும், நீங்கள் அதைச் சாதிப்பதைப் பார்ப்பது மிகவும் உத்வேகம் அளிக்கிறது என்றும் நீங்கள் என்னிடம் சொன்னீர்கள். மக்கள் புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்ளப்போகிறார்கள். நல்லது என் சகோதரரே, உங்களை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.