இரண்டாவது குவாலிஃபையரில் வெற்றிபெறுவது யார்? - சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கணிப்பு!

Updated: Fri, May 27 2022 13:21 IST
Image Source: Google

நடப்பு பதினைந்தாவது ஐபிஎல் தொடரின் இரண்டாவது குவாலிபயர் போட்டி இன்று நடைபெற உள்ளது. இந்த போட்டியில் டு பிளேசிஸ் தலைமையிலான பெங்களூரு அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று ஞாயிற்றுக்கிழமை அன்று குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்த்து விளையாடும் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ள இந்த போட்டியில் வெற்றி பெறப்போகும் அணி யார்? என்பது குறித்த எதிர்பார்ப்பே தற்போது அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது. இந்த தொடரின் பிளே ஆப் சுற்றுக்கு முதல் இரண்டு அணிகளில் ஒன்றாக தகுதி பெற்ற ராஜஸ்தான் அணியானது முதலாவது குவாலிபயர் போட்டியில் குஜராத் அணியிடம் தோற்று தற்போது அடுத்த சுற்றுக்கு வந்துள்ளது.

அதேவேளையில் எலிமினேட்டர் போட்டியில் பெங்களூரு அணி லக்னோ அணியை எளிதாக வீழ்த்தி இந்த சுற்றுக்கு முன்னேறி உள்ளது. இதன் காரணமாக இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி மிகவும் கடுமையான ஒன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே வேளையில் இன்றைய போட்டியில் வெற்றி பெறப்போவது யார் என்பது குறித்த பல்வேறு கருத்துக்களையும் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தனது கருத்தினை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "ராஜஸ்தான் அணி இந்த தொடரில் டாசை இழந்தாலும் வெற்றி பெற பழகிவிட்டது. அதேபோன்று ஆர்சிபி அணி இந்த சீசனில் முக்கியமான போட்டிகளில் சிறப்பான வெற்றிகளை பெற்று வருகிறது.

எனவே இரண்டு அணிகளும் என்னைப் பொறுத்தவரை பலமான அணிகள் தான். இருப்பினும் தற்போதைய நிலையில் ராஜஸ்தானை விட பெங்களூர் அணிக்கு அதிக வெற்றி வாய்ப்பு இருப்பதாக கருதுகிறேன். பிளாட் பிச்சுகளில் அஸ்வின் பந்து வீச கஷ்டப்பட்டு வருகிறார். 

ஆனால் ஒருவேளை மைதானம் ஸ்பின்னர்ளுக்கு சாதகமாக அமைந்தால் நிச்சயம் பெங்களூர் அணிக்கு எதிராக அஷ்வின் மற்றும் சாஹல் ஆகியோர் சிறப்பாக பந்துவீசி பெங்களூரு அணிக்கெதிராக அழுத்தத்தை அளிப்பார்கள்" என தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை