மும்பையைத் தொடர்ந்து புதிய பயிற்சியாளரை நியமித்தது பஞ்சாப் கிங்ஸ்!
ஐபிஎல்லில் 5 முறை கோப்பையை வென்ற வெற்றிகரமான அணி மும்பை இந்தியன்ஸ். ரோஹித் சர்மா கேப்டன்சியில் 5 முறை கோப்பையை வென்று அதிக முறை கோப்பையை வென்ற அணி என்ற சாதனைக்கு சொந்தக்கார அணி மும்பை இந்தியன்ஸ்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றிக்கு கேப்டன் ரோஹித் சர்மா, அணி நிர்வாகம் சிறப்பாக அமைந்ததுதான் காரணம். அந்த அணி மிகச்சிறந்த ஜாம்பவான்களை பயிற்சியாளராக கொண்டிருந்திருக்கிறது. ரிக்கி பாண்டிங், மாஹிலா ஜெயவர்தனே ஆகிய மிகப்பெரிய ஜாம்பவான்கள் தான் அந்த அணியின் பயிற்சியாளர்களாக இருந்திருக்கின்றனர்.
2017 முதல் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்துவந்த மஹேலா ஜெயவர்தனேவிற்கு மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் அதைவிட உயர் பொறுப்பை வழங்குகிறது. எனவே மும்பை இந்தியன்ஸ் அணிக்கு புதிய பயிற்சியாளராக தென் ஆப்பிரிக்க முன்னாள் ஜாம்பவான் மார்க் பௌச்சர் நியமிக்கப்பட்டுள்ளார்.
2017ஆம் ஆண்டிலிருந்து 2022 வரை மும்பை இந்தியன்ஸ் பயிற்சியாளராக ஜெயவர்தனே இருந்த நிலையில், இந்த 6 சீசனில் 3 முறை மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் கோப்பையை வென்று அசத்தியது.
மும்பை இந்தியன்ஸ் அணி தென்னாப்பிரிக்க டி20 லீக்கிலும் கேப்டவுன் அணியை வாங்கியுள்ளது. எனவே க்ளோபல் ஹெட் ஆஃப் பெர்ஃபாமன்ஸ் என்ற பொறுப்பில் மஹேலா ஜெயவர்தனே மற்றும் ஜாகீர் கான் ஆகிய இருவரையும் நியமித்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் குழுமத்தின் அனைத்து அனிகளின் ஆட்டத்தையும் கண்காணித்து மேம்படுத்தும் பொறுப்பு ஜெயவர்தனே மற்றும் ஜாகீர் கானிடம் கொடுக்கப்பட்டுள்ளது.
அதனால் மார்க் பௌச்சர் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்துவரும் மார்க் பௌச்சர், டி20 உலக கோப்பையுடன் அந்த பொறுப்பிலிருந்து விலகுகிறார்.
அதேபோல பஞ்சாப் கிங்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக டிரெவர் பேலிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். பஞ்சாப் கிங்ஸ் அணியின் பயிற்சியாளராக அனில் கும்ப்ளேவிடமிருந்து பெரிதாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அனில் கும்ப்ளே பயிற்சியில் பஞ்சாப் அணி பெரிதாக சோபிக்கவில்லை. இதையடுத்து அந்த பொறுப்பிலிருந்து அனில் கும்ப்ளே நீக்கப்பட்டு, டிரெவர் பேலிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
டிரெவர் பேலிஸ் பயிற்சியாளராக நல்ல அனுபவம் வாய்ந்தவர். 2019 உலக கோப்பையை வென்ற இங்கிலாந்து அணிக்கு பயிற்சியளித்தவர் டிரெவர் பேலிஸ். ஐபிஎல்லில் சன்ரைசர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.