ஐபிஎல் 2022: பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கிய பிசிசிஐ!
ஐபிஎல் திருவிழாவின் 15ஆவது சீனன் வரும் சனிக்கிழமை முதல் ( மார்ச் 26 ) தொடங்கவுள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சிஎஸ்கே மற்றும் கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.
கரோனா அச்சுறுத்தல்கள் இருப்பதால், ஐபிஎல் போட்டிகள் முழுவதும் மஹாராஷ்டிரா மற்றும் அகமதாபாத் நகரங்களில் மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிளே ஆஃப் போட்டிகள் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதுமட்டுமல்லாமல் இங்கு பார்வையாளர்களுக்கும் அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்திருந்தனர். எனினும் அவற்றின் விவரங்கள் அறிவிக்கப்படாமல் இருந்தன.
இந்நிலையில் சிஎஸ்கே - கொல்கத்தா போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியுள்ளது. நீண்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர், வான்கடே மைதானத்தில் 25 விழுக்காடு அளவிற்கு மட்டும் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படவுள்ளனர். சிஎஸ்கே போட்டி என்பதால் டிக்கெட்டை பெற ரசிகர்கள் அதிகளவில் கூடுவார்கள் என்பதால் பல்வேறு ஸ்பெஷல் ஏற்பாடுகளை பிசிசிஐ செய்துள்ளது.
அதாவது இந்த முறை பிரபல டிக்கெட் புக்கிங் செயலியான புக் மை ஷோ மூலமாக ரசிகர்கள் டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ளலாம். கரோனா அச்சுறுத்தல்கள் இருப்பதால், ரசிகர்கள் சிரமமின்றி டிக்கெட்டுகளை பெற இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இதுமட்டுமல்லாமல், ஐபிஎல் வலைதளப்பக்கத்திலும் நேரடியாக டிக்கெட்டுகளை பெறலாம்.