ஆசிய கோப்பை 2023: அச்சுறுத்தும் மழை; சூப்பர் 4 சுற்றுக்கான மைதானம் மாற்றம் - தகவல்!

Updated: Sun, Sep 03 2023 22:15 IST
Image Source: Google

இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மழை காரணமாக பாதியிலேயே கைவிடப்பட்டது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி இஷான் கிஷன் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால் 48.5 ஓவர்களில் 266 ரன்கள் சேர்த்தது. இதன்பின் முதல் பேட்டிங் முடிவடைந்த போது தொடங்கிய மழை, இரவு 10 மணியாகியும் நின்றபாடில்லை.

மழை நிற்பதற்காக காத்திருந்த நடுவர்கள் இறுதியாக இரு அணி கேப்டன்களுடன் ஆலோசனை நடத்தி ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவித்தனர். இதன் காரணமாக இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மிக முக்கிய ஆட்டம் மழையால் கைவிடப்பட்டதால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.

இதற்கு பிசிசிஐ மற்றும ஆசியக் கிரிக்கெட் கவுன்சில் தான் காரணம் என்று பாகிஸ்தான் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. ஆசியக் கோப்பையை பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தலாம் என்று ஆலோசனை கூறிய போதும், ஏசிசி நிர்வாகிகள் ஏற்கவில்லை என்று குற்றச்சாட்டப்பட்டது.

இலங்கையில் ஆகஸ்ட் மற்றும் செப்டம் மாதங்களில் அதிக மழை இருக்கும். இதனையறிந்தே ஆசியக் கோப்பை போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று இலங்கை தலைநகர் கொழும்புவில் கனமழை பெய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் பாலக்கலேவிலும் நாளை மழை பெய்ய வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தரப்பில் சூப்பர் 4 சுற்றுப் போட்டிகளை இடமாற்றம் செய்யலாமா என்று ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சூப்பர் 4 சுற்றுப் போட்டிகள் கொழும்புவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அங்கும் கனமழை பெய்வது ஆசிய கிரிக்கெட் கவுன்சிலை கவலையடைய செய்துள்ளது.

செப்டம்பர் 9ஆம் தேதி முதல் கொழும்புவில் சூப்பர் 4 சுற்று போட்டிகள் நடக்கவுள்ளது. ஒருவேளை சூப்பர் 4 சுற்றுப் போட்டிகளும் மழையால் கைவிடப்படும் நிலை வந்தால், விமர்சனங்களும் அதிகமாகும். இதனால் அடுத்த 48 மணி நேரத்திற்குள் ஆசியக் கோப்பை போட்டிகளை இடமாற்றம் செய்வது குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை