ஆசிய கோப்பை 2025: பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது இந்தியா!

Updated: Mon, Sep 29 2025 00:06 IST
Image Source: BCCI X

Asia Cup 2025 Final: பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி வீரர் திலக் வர்மா அரைசதம் கடந்ததுடன், அணியின் வெற்றிக்கும் வித்திட்டார். 

டி20 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வந்த நிலையில், இன்றுடன் நிறைவடையவுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றிருந்தா இந்த தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறின. மேலும் இரு அணிகளும் இத்தொடர் வரலாற்றில் முதல் முறையாக இறுதிப் போட்டியில் மோதியதால் இந்த போட்டி மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்திருந்தது. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து. 

இதனையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு சாஹிப்சாதா ஃபர்ஹான் மற்றும் ஃபகர் ஸமான் இணை அதிரடியான தொடக்கத்தை வழங்கி, அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். இதில் சிறப்பாக் விளையாடிய ஃபர்ஹான் தனது அரைசதத்தையும் பதிவு செய்தார். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 84 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், சாஹிப்சாதா ஃபர்ஹான் 5 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 57 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய சைம் அயூப்பும் 14 ரன்களை மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். 

அதன்பின் இந்த போட்டியில் அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஃபகர் ஸமானும் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 46 ரன்களில் விக்கெட்டை இழந்தார். மேற்கொண்டு களமிறங்கிய முகமது ஹாரிஸ், கேப்டன் சல்மான் ஆகா, ஹுசைன் தாலத், முகமது நவாஸ், ஷாஹீன் அஃப்ரிடி உள்ளிட்டோரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இதனால் பாகிஸ்தான் அணி 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும், அக்ஸர் படேல், வருண் சக்ரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு அபிஷேக் சர்மா - ஷுப்மன் கில் தொடக்கம் கொடுத்தனர். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அபிஷேக் சர்மா 5 ரன்னில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் சூர்யகுமார் யாதவும் ஒரு ரன்னுடன் நடையைக் கட்டினார். அவர்களைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான ஷுப்மன் கில்லும் 12 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழக்க, இந்திய அணி 20 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் ஜோடி சேர்ந்த திலக் வர்மா-சஞ்சு சாம்சன் இணை பொறுப்புடன் விளையாடி விக்கெட் இழப்பை தடுத்தனர். 

இருவரும் இணைந்து 4ஆவது விக்கெட்டிற்கு 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், சஞ்சு சாம்சன் 2 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 24 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அடுத்து களமிறங்கிய ஷிவம் தூபேவும் சிறப்பாக விளையாட, இந்திய அணியும் இலக்கை நெருங்கியது. மறுபக்கம் அபாரமாக விளையாடி வந்த திலக் வர்மா அரைசதம் கடக்க, இந்திய அணியின் வெற்றியும் உறுதியானது. மேற்கொண்டு இருவரும் இணைந்து 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், இந்திய அணி வெற்றிக்கு கடைசி 12 பந்துகளில் 17 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. 

இதில் அதிரடியாக விளையாடி வந்த ஷிவம் தூபே 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 33 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார். இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த திலக் வர்மா 3 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் என 69 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன் மூலம் இந்திய அணி 19.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 9ஆவது முறையாக ஆசிய கோப்பை தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது. 

Also Read: LIVE Cricket Score

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை