ஆசிய கோப்பை 2025: சூப்பர் ஓவரில் இலங்கையை வீழ்த்தியது இந்தியா!
டி20 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்ற இந்த தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி முன்னேறிய நிலையில், இலங்கை அணி சூப்பர் 4 சுற்றுடன் வெளியேறியுள்ளது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற கடைசி சூப்பர் 4 போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு அபிஷேக் சர்மா - ஷுப்மன் கில் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஷுப்மன் கில் 4 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த திலக் வர்மாவும் 12 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார். மறுபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அபிஷேக் சர்மா அரைசதம் கடந்து அசத்தினர்.
அதன்பின் 8 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 61 ரன்களில் அபிஷேக் சர்மாவும் விக்கெட்டை இழந்தார். பின்னர் இணைந்த திலக் வர்மா - சஞ்சு சாம்சன் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் இருவரும் இணைந்து 60 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், சஞ்சு சாம்சன் ஒரு பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 39 ரன்களில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த திலக் வர்மா 4 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 49 ரன்களையும், அக்ஸர் படேல் 21 ரன்களையும் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கை கொடுத்தனர். இதன் மூலம் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 202 ரன்களைச் சேர்த்தது. இலங்கை அணி தரப்பில் மஹீஷ் தீக்ஷனா, துஷ்மந்தா சமீரா, வநிந்து ஹசரங்கா, தசுன் ஷனகா, சரித் அசலங்கா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.
பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை அணியில் குசால் மெண்டிஸ் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த பதும் நிஷங்கா - குசால் மெண்டிஸ் இணை அதிரடியாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டனர். இதில் இருவரும் தங்கள் அரைசதங்களை பதிவு செய்ததுடன், இரண்டாவது விக்கெட்டிற்கு 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர்.
அதன்பின் 58 ரன்கள் எடுத்த நிலையில் குசால் பெரேரா விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த கேப்டன் சரித் அசலங்கா 5 ரன்னிலும், கமிந்து மெண்டிஸ் 3 ரன்னிலும் என ஆட்டமிழந்தனர். ஆனால் தனது அதிரடியைக் கைவிடாத பதும் நிஷங்கா, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தைப் பதிவு செய்து அசத்தினார். மேற்கொண்டு 7 பவுண்டரிகள், 6 சிக்சர்கள் என 107 ரன்களில் நிஷங்கா விக்கெட்டை இழந்தார்.
Also Read: LIVE Cricket Score
இறுதியில் தசுன் ஷனகா அபாரமாக விளையாடியதன் காரணமாக, இலங்கை அணியும் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்களைச் சேர்த்தது. இதனால் இந்த போட்டியின் முடிவானது சூப்பர் ஓவருக்கு சென்றது. சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 3 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயிக்க, இந்திய அணி முதல் பந்திலேயே அதனை எட்டி த்ரில் வெற்றியைப் பதிவு செய்து அசத்தியது.