AUS vs ENG, 3rd ODI: இங்கிலாந்தை ஒயிட்வாஷ் செய்தது ஆஸ்திரேலியா!

Updated: Tue, Nov 22 2022 17:53 IST
Australia Thrash Double Champions England In 3rd ODI; English Team Concedes First Clean Sweep Since (Image Source: Google)

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று ஆஸ்திரேலிய அணி 2-0 என ஒருநாள் தொடரை ஏற்கனவே வென்றுவிட்ட நிலையில், 3வது ஒருநாள் போட்டி இன்று மெல்பர்னில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்கள் டேவிட் வார்னர் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகிய இருவரும் இணைந்து அபாரமாக பேட்டிங் ஆடி சதமடித்தனர். முதல் விக்கெட்டுக்கு 38 ஓவரில் 269 ரன்களை குவித்தனர். வார்னர் 102 பந்தில் 106 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.

மற்றொரு தொடக்க வீரரான டிராவிஸ் ஹெட் மிகச்சிறப்பாக பேட்டிங் ஆடி 130 பந்தில் 16 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 152 ரன்களை குவித்தார். ஸ்மித்(21) மற்றும் ஸ்டோய்னிஸ்(12) ஆகிய இருவரும் ஏமாற்றமளித்தனர். 42வது ஓவர் முடிவில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் 48 ஓவர்களாக குறைக்கப்பட்டது. டெத் ஓவர்களில் அடித்து ஆடிய மிட்செல் மார்ஷ் 16 பந்தில் 30 ரன்களை விளாச, 48 ஓவரில் 355 ரன்களை குவித்தது ஆஸ்திரேலிய அணி.

டக்வொர்த் முறைப்படி 48 ஓவரில் 364 ரன்கள் இங்கிலாந்துக்கு இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அந்த கடினமான இலக்கை விரட்டிய இங்கிலாந்து வீரர்கள் தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் அடுத்தடுத்து தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்ததால் 32ஆவது ஓவரில் வெறும் 141 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி படுதோல்வி அடைந்தது. 

அந்த அணியில் அதிகபட்சமாகவே ஜேசன் ராய் 33 ரன்கள் தான் அடித்தார். டேவிட் மலான் (2), ஜேம்ஸ் வின்ஸ்(22), சாம் பில்லிங்ஸ்(7), மொயின் அலி (18), ஜோஸ்பட்லர்(1), கிறிஸ் வோக்ஸ்(0) என அனைவருமே சொதப்பியதால் 141 ரன்களுக்கு சுருண்டது இங்கிலாந்து அணி.  ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஆடம் ஸாம்பா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இதன்மூலம் 221 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி, 3-0 என இங்கிலாந்தை ஒயிட்வாஷ் செய்து ஒருநாள் தொடரை வென்றது. கடைசி போட்டியின் ஆட்டநாயகனாக டிராவிஸ் ஹெட்டும், தொடர் நாயகனாக டேவிட் வார்னரும் தேர்வு செய்யப்பட்டனர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை