இந்தியாவை வீழ்த்தி தொடரை வென்றது ஆஸ்திரேலியா!
ஆஸ்திரேலியா - இந்தியா இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று அடிலெய்ட் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. இதனையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மா - ஷுப்மன் கில் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இன்னிங்ஸின் 7ஆவாது ஓவரை சேவியர் பார்ட்லெட் வீசிய நிலையில், ஓவரின் முதல் பந்திலேயே ஷுப்மன் கில்லும், 5ஆவது பந்தில் விராட் கோலியும் விக்கெட்டை இழந்தனர்.
பின்னர் இணைந்த ரோஹித் சர்மா - ஸ்ரேயாஸ் ஐயர் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் இருவரும் தங்களின் அரைசதங்களையும் பதிவு செய்தனர். அதன்பின் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் சர்மா 71 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து 61 ரன்களைச் சேர்த்த நிலையில் ஸ்ரேயாஸ் ஐயரும் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய வீரர்களில் அக்ஸர் படேல் 44 ரன்களையும், ஹர்ஷித் ரானா 24 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர்.
இதன் காரணமாக இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 264 ரன்களைச் சேர்த்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஆடம் ஸாம்பா 4 விக்கெட்டுகளையும், சேவியர் பார்ட்லெட் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணிக்கும் எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அணியின் தொடக்க வீரர்கள் கேப்டன் மிட்செல் மார்ஷ் 11 ரன்களிலும், டிராவிஸ் ஹெட் 28 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் இணைந்த மேத்யூ ஷார்ட் - மேத்யூ ரென்ஷா இணை சிறப்பாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் மேத்யூ ஷார்ட் அரைசதம் கடந்தார். அதேசமயம் மேத்யூ ரென்ஷா 30 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய அலெக்ஸ் கேரியும் 9 ரன்களுடன் நடையைக் கட்டினார். மேற்கொண்டு 4 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என 74 ரன்களைச் சேர்த்த நிலையில் மேத்யூ ஷார்ட்டும் விக்கெட்டை இழந்தார். பின்னர் இணைந்த கூப்பர் கனொலி - மிட்செல் ஓவன் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கூப்பர் கனொலி தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்தார்.
Also Read: LIVE Cricket Score
ஆனால் அரைசதத்தை நெருங்கிய மிட்செல் ஓவன் 2 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 36 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து வந்த சேவியர் பார்ட்லெட், மிட்செல் ஸ்டார்க் ஆகியோரும் விக்கெட்டுகளை இழந்தனர். இருப்பினும் இந்த ஆட்டத்தில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கூப்பர் கனொலி 61 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 46.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி, ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது.