ENG vs IND: பந்தை சேதப்படுத்திய இங்கிலாந்து வீரர்கள்? நடவடிக்கை எடுக்குமா ஐசிசி!
இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான 2வது டெஸ்ட் போட்டி, லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் கடந்த 12ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், நேற்றைய நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில், இந்தியா தனது 2வது இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்துள்ளது.
இந்நிலையில் இப்போட்டியில் பந்துவீச இங்கிலாந்து அணி வீரர்கள் பந்தை சேதப்படுத்தியதாக (Ball Tampering) குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதன்படி நேற்று நான்காம் நாள் ஆட்டத்தின் இரண்டாவது செஷனின் போது, இங்கிலாந்து வீரர்கள் பந்தை தரையில் போட்டு ஷூக்களால் பந்தை சேதப்படுத்துவது போன்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ஆகாஷ் சோப்ரா உள்ளிட்ட பலர், இந்த புகைப்படங்களை வெளியிட்டு, இங்கிலாந்து வீரர்கள் "Ball Tampering" செய்கிறீர்களா? என்று கேள்வி எழுப்பி ட்வீட் செய்துள்ளனர்.
ரஹானேவும், புஜாராவும் தொடர்ந்து சிறப்பாக பேட்டிங் செய்து கொண்டிருந்த போது தான், பந்தை சேதப்படுத்தும் விதமாக இங்கிலாந்து வீரர்களாக செயல்பட்டதாக ரசிகர்கள் சமூக தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதுகுறித்து ஐசிசி உடனடியாக விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.
முன்னதாக ஆஸ்திரேலிய அணி வீரர்கள் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர், பான்கிராஃப்ட் ஆகியோர் பந்தை சேதப்படுத்திய குற்றத்திற்காக ஓராண்டு தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.