ENG vs SA, 2nd ODI: மிரட்டலான கம்பேக் கொடுத்த இங்கிலாந்து அணி!
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்று தொடாரில் முன்னிலைப் பெற்றது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி மான்செஸ்டரில் நேற்று நடைபெற்றது. மழை குறுக்கிட்டதன் காரணமாக ஆட்டம் 29 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணியில் ஜேசன் ராய் 14, ஜானி பேர்ஸ்டோவ் 28, பிலீப் சால்ட் 17, ஜோ ரூட் 1, மோயீன் அலி 6 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதையடுத்து ஜோடி சேர்ந்த லியாம் லிவிங்ஸ்டோன் - சாம் கரண் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் அரைசதம் அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட லியாம் லிவிங்ஸ்டோன் 38 ரன்களிலும், சாம் கரண் 35 ரன்களில் ஆட்டமிழந்தனர். அதனைத் தொடர்ந்து களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, 28.1 ஓவர்களில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 201 ரன்களைச் சேர்த்தது.
தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் டுவைன் பிரிட்டோரியர்ஸ் 4 விக்கெட்டுகளையும், ஆண்ட்ரிச் நோர்ட்ஜே, தப்ரைஸ் ஷம்ஸி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதையடுத்து இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்க அணியில் குயிண்டன் டி காக் 5 ரன்னிலும், மாலன், வேண்டர் டூசென், ஐடன் மார்க்ரம் ஆகியோர் ரன் ஏதுமின்றியும் அடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் 6 ரன்களில் தென் ஆப்பிரிக்க அணி 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அதனைத் தொடர்ந்து வந்த வீரர்களாலும் இங்கிலாந்து பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் 20. 4 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 83 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதன்மூலம் இங்கிலாந்து அணி 118 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி, 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்துள்ளது.