ஐபிஎல் 2025: சிஎஸ்கேவின் பிளே ஆஃப் வாய்ப்பை தகர்த்தது பஞ்சாப் கிங்ஸ்!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 49ஆவது லீக் போட்டியில் எம் எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தின.
சென்னையில் உள்ள எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஷேக் ரஷீத் மற்றும் ஆயூஷ் மாத்ரே இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரின் மீதும் பெரும் எதிர்பார்ப்புகள் இருந்த நிலையில் ஷேக் ரஷீத் 11 ரன்னிலும், ஆயூஷ் மத்ரே 7 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய ரவீந்திர ஜடேஜாவும் 17 ரன்களுடன் நடையைக் கட்டினார்.
இதனையடுத்து ஜோடி சேர்ந்த சாம் கரண் மற்றும் டெவால்ட் பிரீவிஸ் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். இதில் இருவரும் அடுத்தடுத்து பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் பறக்கவிட்டதுடன் 4ஆவது விக்கெட்டிற்கு 70 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில், டெவால்ட் பிரீவிஸ் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 32 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். அதேசமயம் மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த சாம் கரண் நடப்பு ஐபிஎல் தொடரில் தன்னுடைய முதல் அரைசதத்தை பூர்த்தி செய்து அசத்தினார்.
பின்னர் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த சாம் கரண் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 9 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் என 88 ரன்களைக் குவித்த கையோடு விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் தோனி தனது பங்கிற்கு ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 11 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய தீபக் ஹூடா 2 ரன்னிலும், அன்ஷூல் கம்போஜ் மற்றும் நூர் அஹ்மாத் ஆகியோர் அடுத்தடுத்த பந்துகளிலும் விக்கெட்டை இழக்க, யுஸ்வேந்திர சஹால் தனது ஹாட்ரிக் விக்கெட்டுகளையும் பூர்த்தி செய்தார்.
இறுதியில் ஷிவம் தூபேவும் 6 ரன்களில் விக்கெட்டை இழக்க, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 190 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பஞ்சாப் கிங்ஸ் தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய யுஸ்வேந்திர சஹால் ஹாட்ரிக் உள்பட 4 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் சிங் மற்றும் மர்க்கோ ஜான்சென் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு பிரியான்ஷ் ஆர்யா மற்றும் பிரப்சிம்ரன் சிங் வழக்கம் போல் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர்.
இதில் 5 பவுண்டரிகளுடன் 23 ரன்களை எடுத்திருந்த பிரியான்ஷ் ஆர்யா 23 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த பிரப்ஷிம்ரன் சிங் மற்றும் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் பிரப்ஷிம்ரன் சிங் தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்தார். அதன்பின் இருவரின் பார்ட்னர்ஷிப்பும் 60 ரன்களைக் கடந்திருந்த நிலையில் 5 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 54 ரன்களைச் சேர்த்திருந்த பிரப்ஷிம்ரன் விங் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் ஸ்ரேயாஸ் ஐயரும் தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார்.
Also Read: LIVE Cricket Score
மேற்கொண்டு 4ஆவது விக்கெட்டிற்கு களமிறங்கிய ஷஷாங்க் சிங் தனது பங்கிற்கு ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 23 ரன்களை சேர்த்து விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 5 பவுண்டரி, 4 சிக்ஸர்களுடன் 72 ரன்களை சேர்த்த கையோடு ஸ்ரேயாஸ் ஐயரும் ஆட்டமிழந்தார். இருப்பினும் இப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 19.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 4 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கேவை வீழ்த்தியது. இந்த தோல்வியின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பையும் அதிகாரப்பூர்வமாக இழந்துள்ளது.