IRE vs ENG, 1st T20I: பில் சால்ட் அதிரடியில் அயர்லாந்தை வீழ்த்தியது இங்கிலாந்து!
IRE vs ENG, 1st T20I: அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் பில் சால்ட் 89 ரன்களில் விக்கெட்டை இழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி இன்று டப்ளினில் உள்ள தி வில்லேஜ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய அயர்லாந்து அணிக்கு பால் ஸ்டிர்லிங் - ராஸ் அதிர் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்ததுடன், முதல் விக்கெட்டிற்கு 57 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர்.
இதில் ராஸ் அதிர் 26 ரன்னிலும், பால் ஸ்டிர்லிங் 34 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். பின்னர் இணைந்த ஹாரி டெக்டர் - லோர்கன் டக்கர் இணை அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினார். தொடர்ந்து அபாரமாக விளையாடிய இருவரும் அரைசதங்களையும் பதிவுசெய்து அசத்தினார். பின்னர் 3 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் என 55 ரன்களைச் சேர்த்த நிலையில் லோர்கன் டக்கர் விக்கெட்டை இழந்தார். அதேசமயம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஹாரி டெக்டர் 6 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என 61 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தார்.
இதன் மூலம் அயர்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்களைச் சேர்த்தது. இங்கிலாந்து தரப்பில் ஜேமி ஓவர்டன், லியாம் டௌசம், ஆதில் ரஷித் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணிக்கு பில் சால்ட் - ஜோஸ் பட்லர் இணை அதிரடியான தொடக்கத்தை வழங்கினர். இதில் பட்லர் 28 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த ஜேக்கப் பெத்தெல் 24 ரன்னிலும், ரெஹான் அஹ்மத் 8 ரன்னிலும் என ஆட்டமிழந்தனர். அதேசமயம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பில் சால்ட் அரைசதம் கடந்தார்.
Also Read: LIVE Cricket Score
அவருடன் இணைந்து விளையாடிய சாம் கரணும் தனது பங்கிற்கு 3 சிக்ஸர்களுடன் 27 ரன்களைச் சேர்த்து அட்டமிழக்க, மறுபக்கம் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பில் சால்ட் 10 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் என 89 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். இருப்பினும் இங்கிலாந்து அணி 17.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 4 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலையும் பெற்றுள்ளது.