கடிகார சர்ச்சை; விளக்கமளித்த ஹர்திக் பாண்டியா!
துபாயில் இருந்து இந்தியா திரும்பிய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவிடம் இருந்து மும்பை சுங்கத்துறை அதிகாரிகள் விலை மதிப்புள்ள இரண்டு கைக்கடிகாரங்களை பறிமுதல் செய்தனர். இந்நிலையில் இந்த விவகாரத்தில், சமூக வலைத்தளங்களில் தவறான கருத்துகள் பரவுவதாக ஹர்திக் பாண்டியா விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து ஹர்திக் பாண்டியா தனது டுவிட்டர் பக்கத்தில், “துபாயில் இருந்து நேற்று அதிகாலை மும்பை விமான நிலையத்திற்கு வந்ததும், எனது பைகளை எடுத்துக்கொண்டு தாமாக முன்வந்து சுங்கத்துறை அதிகாரிகளை சந்தித்தேன். அவர்களிடம் நான் சட்டப்பூர்வமாக எடுத்து வந்த பொருட்களை காண்பித்து இவற்றிற்கான சுங்க வரியை செலுத்துவதாகவும் கூறினேன்.
இதற்கு ஒத்துழைப்பு தந்த சுங்கத்துறை அதிகாரிகள், பொருட்களுக்கான ஆவணங்களை சமர்ப்பிக்க கூறினர். நானும் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு தந்து ஆவணங்களை சமர்ப்பித்துள்ளேன். பொருட்களுக்கான சுங்க வரியை செலுத்த அதிகாரிகள் முறையான மதிப்பீடு செய்து வருகின்றனர்.
ஆனால், சமூக வலைத்தளங்களில் இதுதொடர்பாக தவறான கருத்துகள் உலவுகின்றன. மேலும், அந்த கைக்கடிகாரங்களின் மதிப்பு சுமார் ரூ.1.5 கோடி இருக்கும். ஆனால், சமூக வலைத்தளங்களில் ரூ.5 கோடி என்று தவறாக கூறி வருகின்றனர்.
Also Read: T20 World Cup 2021
நான் இந்நாட்டின் சட்டத்தை மதிக்கும் குடிமகன். அரசு துறைகளுக்கு மரியாதை தருபவன். தன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் முற்றிலும் ஆதாரமற்றவை” என்று குறிப்பிட்டுள்ளார்.