ஐபிஎல் 2025: சூர்யகுமார் யாதவ் அரைசதம்; பஞ்சாப் கிங்ஸுக்கு 185 டார்கெட்!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஜெய்ப்பூரில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோஹித் சர்மா மற்றும் ரியான் ரிக்கெல்டன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 45 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில் 5 பவுண்டரிகளுடன் 27 ரன்களைச் சேர்த்திருந்த ரியான் ரிக்கெல்டன் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரர் ரோஹித் சர்மாவும் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 24 ரன்களுடன் நடையைக் கட்டினார். அதன்பின் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் வழக்கம் போல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
அதேசமயம் மறுபக்கம் களமிறங்கிய திலக் வர்மா ஒரு ரன்னிலும், அதிரடியாக விளையாடிய வில் ஜேக்ஸ் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸருடன் 17 ரன்களிலும், கேப்டன் ஹர்திக் பாண்டியா 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 26 ரன்களையும் சேர்த்து விக்கெட்டுகளை இழந்தானர். ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்த நிலையிலும் மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த சூர்யகுமார் யாதவ் 34 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். அவருடன் இணைந்த நமன்தீரும் அதிரடியாக விளையாடி அடுத்தடுத்து சிக்ஸர்களை பறக்கவிட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது.
Also Read: LIVE Cricket Score
இறுதில் 2 சிக்ஸர்களுடன் 19 ரன்களைச் சேர்த்திருந்த நமந்தீர் தனது விக்கெட்டை இழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சூர்யகுமார் யாதவ் 6 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என 57 ரன்களைச் சேர்த்து கடைசி பந்தில் விக்கெட்டை இழந்தார். இதன் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்களைச் சேர்த்தது. பஞ்சாப் கிங்ஸ் அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங், வைஷாக் விஜயகுமார் மற்றும் மார்கோ ஜான்சென் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.