ஐபிஎல் 2022: மும்பையிலிருந்து வெளியேறும் ஹர்திக்? வெளியான தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி!
அடுத்தாண்டு ஐபிஎல் தொடர் முதல் புதிதாக இரண்டு அணிகள் சேர்க்கப்படுகின்றன. இதன் காரணமாக வீரர்கள் தேர்வு செய்ய மெகா ஏலம் நடைபெறவுள்ளது.
அந்தவகையில் இந்தாண்டும் மெகா ஏலத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. புதிய அணிகளும் வருவதால் எத்தனை வீரர்களை தக்கவைக்க முடியும் என்ற குழப்பம் நீடித்து வந்தது. அந்தவகையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி ஒவ்வொரு அணியும் தலா 4 வீரர்களை தக்கவைத்துக் கொள்ளலாம் எனக் கூறப்படுகிறது.
அதன்படி 2 இந்திய வீரர்கள் மற்றும் 2 அயல்நாட்டு வீரர்கள் என தக்கவைக்கலாம். இல்லையென்றால் 3 இந்திய வீரர்கள் மற்றும் ஒரு அயல்நாட்டு வீரரை தக்கவைக்கலாம் என்ற வசதியுள்ளது. எனவே ஒவ்வொரு அணியும் எந்தந்த வீரர்களை தக்கவைக்கப்போகிறது என்ற கேள்வி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இந்நிலையில் 5 முறை சாம்பியனான மும்பை அணி தக்கவைக்கபோகும் வீரர்களின் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து பேசியுள்ள ஐபிஎல் அதிகாரி ஒருவர், கேப்டன் ரோகித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா மற்றும் கீரான் பொல்லார்ட் ஆகியோர் தான் மும்பை அணியின் முதல் 3 தேர்வுகளாக இருக்கிறது. 4ஆவது வீரராக சூர்யகுமார் யாதவ் அல்லது இஷான் கிஷானை தக்கவைக்கலாம் எனத்தெரிவித்துள்ளார்.
Also Read: டி20 உலகக் கோப்பை 2021
இந்த பட்டியலில் மும்பை அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவின் பெயர் இடம்பெறவில்லை. அவரின் தற்போதைய ஃபார்ம் மோசமான நிலையில் உள்ளது. கடந்த 2 ஐபிஎல் தொடரிலும் அவர் பந்துவீசவே இல்லை. இதே போல பேட்டிங்கிலும் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதன் காரணமாக தான் ஹர்திக் பாண்ட்யாவை கழட்டிவிட மும்பை அணி முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது.