ஐபிஎல் 2022 இறுதிப்போட்டி: ராஜஸ்தான் பேட்டர்களை சுருட்டிய குஜராத் பவுலர்கள்!

Updated: Sun, May 29 2022 21:55 IST
IPL 2022 finals: Gujarat Bowlers restricted RR batters by 130 runs (Image Source: Google)

இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்றுவந்த ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசன் இன்றுடன் நிறைவடைகிறது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்றுவரும் இப்போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விளையாடிவருகின்றன. 

அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றுவரும் இப்போட்டியில் டாஸை வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பேட்டிங் செய்வதாக துணிச்சலான முடிவை எடுத்தார்.

அதன்படி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் - ஜோஸ் பட்லர் இணை களமிறங்கியது. இப்போட்டியில் முதல் இரண்டு ஓவர்களை நிதானமாக விளையாடிய இந்த இணை மூன்றாவது ஓவரில் அதிரடி காட்டத்தொடங்கியது.

அந்த ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சரை அடித்திருந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் 22 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய சஞ்சு சாம்சனும் அதிரடியாக விளையாட முயன்று 14 ரன்களுடன் விக்கெட்டை இழந்தார்.

அவரைத் தொடர்ந்து களமிறங்கிய தேவ்தத் படிக்கல்லும் இரண்டு ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஜோஸ் பட்லர் 39 ரன்களில் ஆட்டமிழந்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

அதன்பின் ஷிம்ரான் ஹெட்மையர், ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்துவந்த ட்ரெண்ட் போல்ட் ஒரு சிக்சரை விளாசி ஆட்டமிழந்து வெளியேறினார். 

பின்னர் களமிறங்கிய ரியான் பராக், ஒபெத் மெக்காய் ஆகியோரும் ஒரு சில பவுண்டரிகளை மட்டுமே அடித்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 130 ரன்களை மட்டுமே எடுத்தது.

குஜராத் டைட்டன்ஸ் அணி தரப்பில் கேப்டன் ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகளையும், சாய் கிஷோர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை