ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய உனாத்கட்; இந்திய அணிக்கு பின்னடைவு!
16ஆவது சீசன் ஐபிஎல் நேற்று நடைபெற்ற 43ஆவது லீக் போட்டியில் லக்னோவை 18 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு தோற்கடித்தது. இருப்பினும் அந்த போட்டியின் ஆரம்பத்திலேயே லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுல் ஒரு பவுண்டரியை தடுப்பதற்காக வேகமாக ஓடிய போது துரதிஷ்டவசமாக தசை பிடிப்பு காயத்தை சந்தித்தார். அதனால் ஏற்பட்ட காயத்தால் அதிகப்படியான வலியால் தவித்த அவர் மருத்துவரின் முதல் உதவிக்கு பின் மிகவும் போராட்டமாக எழுந்து நடந்து இப்போட்டியிலிருந்து பாதியிலேயே வெளியேறினார்.
என்ன தான் டி20 கிரிக்கெட்டில் சமீப காலங்களில் தடுமாற்றமாக செயல்பட்டு வந்தாலும் பொறுமையாக விளையாட வேண்டிய டெஸ்ட் கிரிக்கெட்டில் நங்கூரமாக நின்று கிளாஸ் பேட்டிங்கை வெளிப்படுத்தும் திறமை கொண்ட அவர் இப்போட்டியில் காயமடைந்தது இந்தியாவுக்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் வரும் ஜூன் மாதம் லண்டன் ஓவல் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெறும் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் விளையாடுவதற்காக அறிவிக்கப்பட்டுள்ள ரோஹித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணியில் ஒருவராக அவரும் தேர்வாகியுள்ளார்.
இந்நிலையில், வலைப்பயிற்சியில் லக்னோ அணியில் உள்ள மற்றொரு இந்திய வீரர் ஜெயதேவ் உனத்கட் பந்து வீசி பயிற்சிகளை எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக தவறி விழுந்ததில் அவரது இடது தோள்பட்டை பகுதியில் பலத்த காயமடைந்தது. இதையடுத்து மருத்துவரது உதவியுடன் தோள்பட்டையில் ஐஸ்பேக் வைத்தபடி அங்கிருந்து சென்றார். அதன்பிறகு அவருக்கு ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து, அவர் நடப்பாண்டு ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறியுள்ளார்.
தற்போது அவருக்கு தோள்பட்டை பகுதியில் காயம் ஏற்பட்டுள்ள நிலையில், உனாத்கட் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான இந்திய அணிக்கு திரும்புவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனினும், இன்னும் ஒரு மாத காலம் இருக்கும் நிலையில், அதற்குள்ளாக அவர் குணமடைந்து அணியில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.