ஐபிஎல் 2022: குஜராத் டைட்டன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - போட்டி முன்னோட்டம்!
இந்தியவில் கோலாகலமாக நடைபெற்று வந்த 15ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் அதன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நடப்பு தொடரில் ஏற்கனவே இருந்த 8 அணிகளுடன் 2 புதிய அணிகள் இணைப்பட்டு மொத்தம் 10 அணிகள் களமிறங்கின. இதில் அறிமுக அணியான குஜராத் டைட்டன்ஸ் முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதல் அணியாகவும், 4 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் 2ஆவது அணியாகவும், 2 முறை சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 3ஆவது அணியாகவும் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறின. தொடர்ந்து வாழ்வா? சாவா லீக் ஆட்டத்தில் தோல்வி கண்ட டெல்லி கேப்பிட்டல்ஸ், மற்றும் தகுதி புள்ளிகளை பெறாத பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாமல் நடையை கட்டினார்.
பிளே ஆஃப் சுற்றின் முதலாவது தகுதிச் சுற்றில் பட்டியலில் முதல் மற்றும் 2ஆவது இடத்தில் இருந்த குஜராத் டைட்டன்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிய நிலையில், ராஜஸ்தானை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் அணி தும்சம் செய்து நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
பின்னர் மே 25ஆம் தேதி நடந்த எலிமினேட்டர் சுற்றில் பட்டியலில் 3ஆவது மற்றும் 4ஆவது அணிகளாக இருந்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் பெங்களூரு அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றியை ருசித்தது. இதன்மூலம் 2ஆவது தகுதி சுற்றுக்கு முன்னேறிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்டது.
இந்த ஆட்டத்தில் 158 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய ராஜஸ்தான், தொடக்க வீரர் பட்லரின் அதிரடி ஆட்டத்தால் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இதன்மூலம் தற்போது ராஜஸ்தான் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
நாளை அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் அரங்கேறும் இந்த இறுதிப்போட்டியில் ஹர்டிக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
அறிமுக அணியான குஜராத் டைட்டன்ஸை வழிநடத்தி வரும் ஹர்டிக் பாண்டியா அணியை மிகச்சிறப்பாக வழிநடத்தி வருகிறார். லீக் சுற்றில் நடந்த 14 ஆட்டங்களில் அந்த அணி 4இல் மட்டும் தோல்வி கண்டு 10 வெற்றி பெற்று முதல் அணியாக பிளே ஆஃப்க்கு முன்னேறியது. சில ஆட்டங்களில் அதிஷ்டத்தால் வெற்றி பெற்றது என்றாலும், அதற்குப்பின் இருந்த அந்த அணியினரின் உழைப்பு அளப்பரியது.
இந்தாண்டு நடந்த மெகா ஏலத்திற்கு பிறகு பல அணிகள் தங்கள் அணியை மறுகட்டமைப்பு செய்திருந்தன. ஆனால், அறிமுக அணியான குஜராத் முதலில் முக்கிய வீரர்கள் தேர்வு, பின்னர் மெகா ஏலத்தில் வீரர்கள் தேர்வு, அதன்பின்னர் கேப்டன் தேர்வு என ஒவ்வொரு படியாக கடந்து, தீவிர பயிற்சி மேற்கொண்டு நெடுந்தூர பயணத்திற்குப் பிறகு தற்போது இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது.
குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா, அபினவ் மனோகர், விருத்திமான் சாஹா, ஷுப்மான் கில், மேத்யூ வேட், டேவிட் மில்லர், ராகுல் திவேத்தியா என பலம் வாய்ந்த பேட்டிங் வரிசையை கொண்டுள்ளது. ரஷித் கான், அல்சாரி ஜோசப் போன்ற ஆல்ரவுண்டர்கள் அணிக்கு மேலும் வலு சேர்க்கிறார்கள். சுழலில் ரஷித் கான் வழக்கம்போல் மிரட்டி வருகிறார். அவருடன் சாய் கிஷோர் உறுதுணையாக இருக்கிறார். லாக்கி பெர்குசன், முகமது ஷமி, யாஷ் தயாள் போன்ற வீரர்கள் வேகத்தில் பட்டையை கிளப்புகின்றனர்.
சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 9 வெற்றி 5 தோல்விகளுடன் லீக் சுற்றில் 2ம் இடத்தை பிடித்ததோடு நிறைவு செய்தது. அந்த அணியின் தொடக்க வீரர் ஜோஸ் பட்லர் 4 சதம் 4 அரைசதம் என 824 ரன்களை குவித்து வலுவான ஃபார்மில் உள்ளார். மேலும், அவர் நடப்பு தொடரில் அதிக ரன்களை குவித்த வீரர்களுக்கான ஆரஞ்சு நிற தொப்பியையும் வசப்படுத்தி உள்ளார்.
பட்லர் தவிர, ராஜஸ்தான் அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேப்டன் சஞ்சு சாம்சன், தேவ்தத் படிக்கல், ஷிம்ரோன் ஹெட்மியர், ரியான் பராக் போன்ற வீரர்களும் பேட்டிங்கில் பலம் சேர்க்கின்றனர். இவர்களுடன் ஹாட்ரிக் அரைசதம் அடித்த ஆல்ரவுண்டர் வீரர் அஸ்வினும் அணியில் இருப்பதால் பேட்டிங் வரிசை கூடுதல் பலம் பெற்றுள்ளது.
பந்துவீச்சில் 26 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ள சுழல் மன்னன் யுஸ்வேந்திர சாஹல் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர்களுக்கான ஊதா நிற தொப்பை வசப்படுத்தியுள்ளார். அவருடன் இணைந்து நெருக்கடி கொடுக்கும் அஸ்வினும் தனது மாயாஜால சுழலில் சிக்க வைத்து கதிகலங்க செய்கிறார். டிரெண்ட் போல்ட், பிரசித் கிருஷ்ணா, ஓபேட் மெக்காய் போன்ற வேகப்பந்துவீச்சாளர்கள் வேகத் தாக்குதல் தொடுத்து மிரட்டி வருகின்றனர்.
இரு அணிகளுமே சமபலத்துடன் காணப்படுவதால், இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று எந்த அணி கோப்பையை வெல்லும் என்ற பெரும் எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.