PAK vs AUS, 1st Test (Day 4): டிராவை நோக்கி முதல் டெஸ்ட்!
பாகிஸ்தான் - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் நடைபெற்றுவருகிறது.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 476 ரன்களில் டிக்ளர் செய்தது. அந்த அணியில் அதிகபட்சமாக அசார் அலி 185 ரன்களைச் சேர்த்தார்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 271 ரன்களைச் சேர்த்துள்ளது.
இதையடுத்து 205 ரன்கள் பின் தங்கிய நிலையில் ஆஸ்திரேலிய அணி இன்று நான்காம் நாள் ஆட்டத்தைத் தொடர்ந்தது. அந்த அணி தரப்பில் மார்னஸ் லபுசாக்னே 69 ரன்களுடனும், ஸ்டீவ் ஸ்மித் 24 ரன்களுடனும் களமிறங்கினர்.
இதில் சதமடிபார் என எதிர்பார்க்கப்பட்ட லபுசாக்னே 90 ரன்களிலும், ஸ்டீவ் ஸ்மித் 78 ரன்களிலும் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டனர்.
அடுத்து களமிறங்கிய ட்ராவிஸ் ஹெட் 8 ரன்னிலும், காமரூன் க்ரீன் 48 ரன்னிலும் ஆட்டமிழந்தார். இதனால் 4ஆம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 449 ரன்களைச் சேர்த்தது.
அந்த அணியில் மிட்செல் ஸ்டார்க் 19 ரன்களிலும், பாட் கம்மின்ஸ் 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். பாகிஸ்தான் தரப்பில் நௌமன் அலி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதனால் 27 ரன்கள் பின் தங்கிய நிலையில் ஆஸ்திரேலிய அணி நாளை 5ஆம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது. மேலும் நாளைய தினம் போட்டியின் கடைசி நாள் என்பதால் இப்போட்டி டிராவில் முடியவே அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.