பகளிரவு டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி 225 ரன்னில் ஆல் அவுட்; வெஸ்ட் இண்டீஸ் தடுமாற்றம்!
WI vs AUS, 3rd Test: வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 225 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டாகியுள்ளது.
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. நடந்து முடிந்த முதலிரண்டு போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று ஜமைக்காவில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு சாம் கொன்ஸ்டாஸ் மற்றும் உஸ்மான் கவாஜா இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் 17 ரன்களைச் சேர்த்த நிலையில் சாம் கொன்ஸ்டாஸும், 23 ரன்களில் உஸ்மான் கவாஜாவும் விக்கெட்டை இழந்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த கேமரூன் க்ரீன் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் இருவரும் அரைசதம் அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கேமரூன் க்ரீன் 46 ரன்களிலும், அவரைத்தொடர்ந்து ஸ்டீவ் ஸ்மித் 48 ரன்களிலும் என விக்கெட்டுகளை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டனர். அதன்பின் களமிறங்கிய டிராவிஸ் ஹெட்டும் 20 ரன்களுடன் நடையைக் கட்டினார்.
பின்னர் களமிறங்கிய வீரர்களில் அலெக்ஸ் கேரி 21 ரன்களையும், கேப்டன் பாட் கம்மின்ஸ் 24 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறியதால், ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 225 ரன்களில் ஆல் அவுட்டானது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஷமார் ஜோசப் 4 விக்கெட்டுகளையும், ஜெய்டன் சீல்ஸ் மற்றும் ஜஸ்டின் க்ரீவ்ஸ் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பிராண்டன் கிங் மற்றும் கெவ்லான் ஆண்டர்சன் இணை தொடக்கம் கொடுத்தனர்.
Also Read: LIVE Cricket Score
இதில் கெவ்லான் ஆண்டர்சன் 3 ரன்களை மட்டுமே எடுத்த கையோடு விக்கெட்டை இழந்தார். இதன் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 16 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் பிராண்டன் கிங் 8 ரன்களுடனும், கேப்டன் ரோஸ்டன் சேஸ் 3 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் மிட்செல் ஸ்டார்க் ஒரு விக்கெட்டை கைப்பற்றியுள்ளார். இதனையடுத்து 209 ரன்கள் பின் தங்கிய நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.