உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: வெற்றி பெறும் அணி குறித்து பேசிய பிரெட் லீ!
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி வருகிற ஜூன் 18-ஆம் தேதி சவுதாம்ப்டன் நகரில் உள்ள ஏஜஸ் பவுல் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான இந்திய அணி நேற்று இங்கிலாந்து வந்து அடைந்த நிலையில் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
அதேவேளையில் நியூசிலாந்து அணியோ இங்கிலாந்து அணியுடனான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் தற்போது விளையாடி வருகிறது. இந்த டெஸ்ட் தொடரை முடித்துவிட்டு நேரடியாக நியூசிலாந்து அணி இந்திய அணிக்கு எதிரான இந்த இறுதிப் போட்டியில் மோதும்.
இந்நிலையில் இந்த இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை யார் கைப்பற்றுவார்கள் ? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் உள்ளது. மேலும் இந்த இறுதிப் போட்டி குறித்த கருத்துக்களையும், விமர்சனங்களையும் பல்வேறு முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் வர்ணனையாளர், நிபுணர்கள், பிரபலங்கள் என பலரும் அளித்து வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான பிரெட் லீ இந்த இறுதிப் போட்டி குறித்து தனியார் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி ஒன்றினை அளித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய பிரெட் லீ, “இங்கிலாந்து மைதானம் வேகப்பந்து வீச்சுக்கு முழுவதுமாக ஒத்துழைக்கும். அதனால் இந்த மைதானத்தில் நல்ல வேகமும், நல்ல ஸ்விங்கும் இருக்கும் இதனால் பேட்ஸ்மேன்கள் ரன் குவிப்பதில் சிக்கல் ஏற்படும்.
பேட்ஸ்மேன்கள் நீண்ட நேரம் நிதானமாக விளையாடினால் மட்டுமே இந்த இதுபோன்ற மைதானங்களில் ரன்களை குவிக்க முடியும். இதனால் இந்த இறுதிப் போட்டியில் எந்த அணி சிறப்பாக பந்துவீசுகிறதோ அந்த அணிதான் வெற்றிபெறும் என்று தீர்மானிக்க முடியும்.
அதன்படி பார்க்கும் போது என்னை பொறுத்தவரை இந்த சூழல் நியூசிலாந்து அணிக்கு சாதகமாக இருக்கும் என நினைக்கிறேன். நியூசிலாந்து மைதானமும், இங்கிலாந்து மைதானமும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி தன்மையுடையவை. இதனால் நியூசிலாந்து பவுலர்களுக்கு இந்த மைதானங்கள் பெரிதளவு கைகொடுக்கும் எனவே நியூசிலாந்து பவுலர்கள் எந்தவித தடுமாற்றமும் இல்லாமல் இந்திய அணிக்கு எதிராக பந்து வீச முடியும். இதனால் நியூசிலாந்து அணியின் கையே மேலோங்கி உள்ளது என்றே நான் கருதுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.