டிஎன்பிஎல் 2021: உள்ளூர் ‘ரன் மெஷின்’ சாய் சுதர்சன்!
கரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலைக்கு மத்தியில் டிஎன்பிஎல் எனப்பட்டும் தமிழ்நாட்டின் உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடரின் 5ஆவது சீசன் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
மொத்தம் எட்டு அணிகள் பங்கேற்று விளையாடி வரும் இத்தொடரின் லீக் ஆட்டங்களளே அதிரடிக்கு பஞ்சமின்றி ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றி வருகிறது.
அதிலும் புதுமுக வீரர்கள் பலரும் இத்தொடரின் மூலம் தங்கள் அடையாளத்தை வெளிக்காட்டி வருகின்றனர். அந்த வரிசையில் நடப்பு சீசனின் ரன் மெஷினாக மாறியுள்ளார் லைகா கோவை கிங்ஸ் அணிக்காக விளையாடிவரும் 19 வயதேயான சாய் சுதர்சன்.
நடப்பாண்டு சீசனின் முதல் போட்டியிலேயே 87 ரன்களை குவித்து அசத்திய சாய் சுதர்சன், நடப்பு சீசனில் விளையாடிய ஐந்து போட்டிகளில் 4 அரைசதங்களை விளாசி அசத்தியுள்ளார். மீதமுள்ள ஒரு போட்டியிலும் 40 ரன்களைக் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார்.
நடப்பாண்டு டிஎன்பிஎல் சீசனில் சாய் சுதர்சன் விளையாடிய ஐந்து போட்டிகளில் மொத்தம் 296 ரன்களைச் சேர்த்துள்ளார். அவரது பேட்டிங் சராசரி 59.2ஆகும். இதனால் சாய் சுதர்சன் நிச்சயம் ஐபிஎல் மற்றும் உள்ளூர் லீக் ஆட்டங்களில் ஜொலித்து இந்திய அணிக்காக நிச்சயம் விளையாடுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.