4th Test, Day 1: ஜெய்ஸ்வால், சாய் அரைசதம்; ரன் குவிப்பில் இந்திய அணி!
Manchester Test: இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்து வரும் இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சாய் சுதர்ஷன் ஆகியோர் அரைசதம் கடந்து அசத்தினர்.
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பை டெஸ்ட் தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டி இன்று மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கேஎல் ராகுல் இணை தொடக்கம் கொடுத்தனர். இப்போட்டியின் ஆரம்பம் முதலே இருவரும் நிதானமாக விளையாடி விக்கெட் இழக்கும் வாய்ப்புகளைக் குறைத்ததுடன், தேவைப்படும் பந்துகளில் மட்டும் பவுண்டரிகளை அடித்து அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர்.
இதில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 94 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில் கேஎல் ராகுல் 46 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். மறுபக்கம் அரைசதம் கடந்து அசத்திய யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் 10 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 58 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் ஷுப்மன் கில்லும் 12 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த சாய் சுதர்ஷன் மற்றும் ரிஷப் பந்த் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தியதுடன், 4ஆவது விக்கெட்டிற்கு 80 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர்.
இதில் சாய் சுதர்ஷன் தனது அரைசதத்தையும் பதிவுசெய்து அசத்தினார். பின் அதிரடியாக விளையாடும் முயற்சியில் ரிஷப் பந்த் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 37 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் காயமடைந்து ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் பெவிலியனுக்கு திரும்பினார். அவரைத்தொடர்ந்து 61 ரன்களில் சாய் சுதர்ஷனும் விக்கெட்டை இழந்தர். பின்னர் இணைந்த ரவீந்திர ஜடேஜா மற்றும் ஷர்தூல் தாக்கூர் இணையும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். அதன்பின் போதிய வெளிச்சமின்மை காரணமாக முதல்நாள் ஆட்டம் முன்கூட்டியே முடிவடைந்தது.
இதன்மூலம் முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 264 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் ரவீந்திர ஜடேஜா 19 ரன்களுடனும், ஷர்தூல் தாக்கூர் 19 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து அணி தரப்பில் பென் ஸ்டோக்ஸ் 2 விக்கெட்டுகளையும், கிறிஸ் வோக்ஸ் மற்றும் லியாம் டௌசன் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளனர்.