11 அணிகள் இடையிலான 9ஆவது ஐஎஸ்எல் கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று மாலை 5.30 மணிக்கு தொடங்கிய லீக் ஆட்டத்தில் 2 முறை சாம்பியனான சென்னையின் எஃப்சி, நடப்பு சாம்பியன் ஹைதராபாத்துடன் மோதியது.
பரப்பரப்புடன் தொடங்கிய இப்போட்டியின் தொடக்கம் முதலே இரு அணி வீரர்களும் மாறி மாறி கோலடிக்க முயற்சிசெய்தனர். ஆனால் இரு அணியின் முயற்சிகளும் வீணாகின. இதனால் முதல் பாதி ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் கோலின்றி சமனிலையில் நீடித்தன.
இதையடுத்து தொடங்கிய இரண்டாம் பாதி ஆட்டத்தின் 65ஆவது நிமிடத்தில் ஹைதராபாத் அணியின் ஹலிசரண் நர்ஸாரி கோலடிக்க, அதைத் தொடர்ந்து 74ஆவது நிமிடத்தில் சிங்லென்சனா சிங்கும் கோலடித்து அசத்த ஹைதராபாத் அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது.
இதற்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் ஆட்டத்தின் 78ஆவது நிமிடத்தில் சென்னை அணி தரப்பில் பீட்டர் சிலிஸ்கோவிக் கோலடித்தார். ஆனால் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ஹைதராபாத் அணிக்கு ஆட்டத்தின் 85ஆவது நிமிடத்தில் போர்ஜா கோலடித்து அணியின் வெற்றியை உறுதிசெய்தார்.
ஆனால் அதன்பின் சென்னை அணி வீரர்கள் மேற்கொண்ட கோலடிக்கும் முயற்சிகள் அனைத்தும் வீணாகின. இதனால் ஆட்டநேர முடிவில் ஹைதராபாத் எஃப்சி அணி 3-1 என்ற கோல் கணக்கில் சென்னையின் எஃப்சி அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது.