இந்தியன் சூப்பர் லீக் எனப்படும் ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் நடப்பாண்டு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் சென்னையின் எஃப்சி மற்றும் மும்பை சிட்டி எஃப்சி அணிகள் பலப்பரீட்சை நடத்தினர்.
போட்டியின் தொடக்கம் முதலே இரு அணி வீரர்கள் கோலடிக்க முயற்சிகளை மேற்கொண்டனர். மாறி மாறி கோல் பகுதியை முற்றுகையிட்டனா். இதன் பலனாக முதல் பாதியில் 34ஆவது நிமிடத்தில் சென்னை வீரா் பீட்டா் ஸ்லிஸ்கோவிச் அற்புதமாக கோலடித்தாா். ஜூலியஸ் டக்கா் பாஸை அருமையாக பயன்படுத்தி கோலடித்தாா் ஸ்லிஸ்கோவிச்.
எனினும் சென்னை அணியின் மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. ஆட்டத்தின் 38ஆவது நிமிடத்தில் மும்பை வீரா் லாலியன்ஸுலா சாங்டே தனது அணியின் முதல் கோலை அடித்தாா். இதனால் முதல் பாதி ஆட்டம் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்தது.
இதைத்தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதி ஆட்டத்திலும் சென்னை வீரா்கள் முன்னிலைப் பெற கடுமையாக போராடினர். ஆனால் அவர்களால் மும்பையின் டிஃபென்ஸை தாண்ட மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.
ஆனால் மறுபக்கம் மும்பை அணிக்கு ஆட்டத்தின் 57ஆவது நிமிடத்தில் கிரெக் ஸ்டீவா்ட் கோலடிக்க, அந்த அணி 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலைப் பெற்றது. இப்போட்டியின் இறுதிவரை போராடிய சென்னை அணியால் மேற்கொண்டு கோல் எதையும் எடிக்க முடியவில்லை.
இதனால் ஆட்டநேர முடிவில் மும்பை சிட்டி எஃப்சி அணி 2-1 என்ற கோல் கணக்கில் சென்னையின் எஃப்சி அணியை வீழ்த்தியது. இந்த சீசனில் சென்னையை இரண்டாவது முறையாக மும்பை அணி வீழ்த்தியுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் மும்பை சிட்டி மீண்டும் புள்ளிப்பட்டியளின் முதலிடத்துக்கு முன்னேறியது. சென்னையின் எஃப்சி அணி அணி 7ஆவது இடத்திலேயே நீடிக்கிறது.