பதினோறு அணிகளுக்கு இடையிலான ஒன்பதாவது இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் சென்னையில் இன்று நடைபெற்ற போட்டியில் சென்னையின் எஃப்.சி - மும்பை சிட்டி அணிகள் மோதின.
இந்த போட்டியின் தொடக்கத்தில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சென்னையின் எஃப்சி அணிக்கு ஆட்டத்தின் 19ஆவது நிமிடத்தில் பீட்டரும், ஆட்டத்தின் 32ஆவது நிமிடத்தில் கயாட்டியும் அடுத்தடுத்து கோல்களை அடித்து அணியை முன்னிலைப் படுத்தினர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் செயல்பட்ட மும்பை சிட்டி அணிக்கு ஆட்டத்தின் 33ஆவது நிமிடத்தில் ஜார்ஜும், ஆட்டத்தின் 45+3ஆவது நிமிடத்தில் கிரேக் ஸ்டீவர்ட்டும் கோலடித்து அசத்தினர். இதன்மூலம் முதல் பாதி ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் தலா 2 கோல்களை அடித்து சமநிலையில் இருந்தன.
இதையடுத்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்திலும் சிறப்பாக செயல்பட்ட மும்பை சிட்டி அணிக்கு வினித் ராஜ் 49ஆவது நிமிடத்திலும், ஆட்டத்தின் 60ஆவது நிமிடத்தில் விக்னேஷும், ஆட்டத்தின் 65ஆவது நிமிடத்தில் அல்பர்ட்டோவும், 90ஆவது நிமிடத்தில் பிபின் சிங்கும் கோலடித்தனர்.
ஆனால் கடைசிவரை போராடிய சென்னையின் எஃப்சி அணியால் இரண்டாம் பாதியில் எதிரணியின் டிஃபென்ஸைத் தாண்டி ஒரு கோலைக்கூட அடிக்க முடியவில்லை. இதன்மூலம் ஆட்டநேர முடிவில் மும்பை சிட்டி எஃப்சி அணி 6-2 என்ற கோல் கணக்கில் சென்னையின் எஃப்சி அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது.
சென்னையை வீழ்த்தியன் மூலம் மும்பை சிட்டி எஃப்சி அணி இந்த சீசனில் 3ஆவது வெற்றியை பெற்று, புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியது. சென்னையின் எஃப்சி அணி 7 புள்ளிகளுடன் 6ஆவது இடத்தைப் பிடித்தது.