
ஐசிசி ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது. 10 அணிகள் பங்கேற்றுள்ள இப்போட்டி தொடரில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய 3 அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்று விட்டன. இங்கிலாந்து, இலங்கை, வங்காளதேசம், நெதர்லாந்து ஆகிய அணிகள் வெளியேற்றப்பட்டு விட்டன. அரை இறுதிக்கு தகுதி பெறும் 4ஆவது மற்றும் கடைசி அணி எது என்பதில் இன்னும் உறுதியாகவில்லை என்றாலும் நியூசிலாந்துக்கு அதிக வாய்ப்பு உள்ளது.
அரை இறுதி வாய்ப்பில் நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகியவை இருந்தன. நியூசிலாந்து நேற்று தனது கடைசி லீக் ஆட்டத்தில் இலங்கையை வீழ்த்தி 10 புள்ளிகள் பெற்று 4ஆவது இடத்தில் உள்ளது. அந்த அணியின் ரன் ரேட் +0.743 ஆக உள்ளது. பாகிஸ்தான் 8 புள்ளிகளுடன் (ரன் ரேட் +0.036) உள்ளது. அந்த அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் நாளை இங்கிலாந்துடன் மோதுகிறது. இதில் பாகிஸ்தான் வெற்றி பெறுவதுடன், நியூசிலாந்தின் ரன் ரேட்டையும் முந்த வேண்டிய சூழலிற்கு தள்ளப்பட்டது.
ஆனால் அது பாகிஸ்தானுக்கு மிகவும் கடினமானது. பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்ததால், இங்கிலாந்தை 287 ரன்கள் வித்தியாசத்தில் வென்றால் மட்டுமே நியூசிலாந்தின் ரன் ரேட்டை கடக்க முடியும். ஒரு வேளை இங்கிலாந்து முதலில் பேட் செய்து 150 ரன்கள் எடுத்தால் அந்த இலக்கை பாகிஸ்தான் 3.4 ஓவர்களிலேயே எடுக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் இன்று நடைபெறும் 44ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இப்போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதனால் பாகிஸ்தான் அணியின் அரையிறுதி வாய்ப்பும் முடிவுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து: ஜானி பேர்ஸ்டோவ், டேவிட் மலான், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஹாரி புரூக், ஜோஸ் பட்லர்(கே), மொயீன் அலி, கிறிஸ் வோக்ஸ், டேவிட் வில்லி, கஸ் அட்கின்சன், ஆதில் ரஷித்
பாகிஸ்தான்: அப்துல்லா ஷபீக், ஃபகார் ஸமான், பாபர் ஆசம்(கே), முகமது ரிஸ்வான், சௌத் ஷகீல், இஃப்திகார் அகமது, ஆகா சல்மான், ஷதாப் கான், ஷஹீன் அப்ரிடி, முகமது வாசிம் ஜூனியர், ஹாரிஸ் ரவுஃப்