NZ vs SA, 1st Test: 95 ரன்களில் சுருண்டது தென் ஆப்பிரிக்கா!

Updated: Thu, Feb 17 2022 12:37 IST
Image Source: Google

நியூசிலாந்து- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்து, டிம் சவுத்தி, மேட் ஹென்ரி, கைல் ஜாமிசன், நீல் வாக்னர் ஆகிய நான்கு நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர்களுடன் பீல்டிங் செய்ய களம் இறங்கியது.

இப்போட்டியின் 2ஆவது ஓவரை மேட் ஹென்ரி வீசினார். தென்ஆப்பிரிக்காவின் கேப்டன் டீன் எல்கர் 1 ரன்கள் எடுத்த நிலையில் இந்த ஓவரில் ஆட்டமிழந்தார்.

அதன்பின் மேட் ஹென்ரி தொடர்ச்சியாக விக்கெட் எடுத்த வண்ணம் இருந்தார். மறுமுனையில் விளையாடிய சரேல் வர்வீயை 10 ரன்னில் வெளியேற்றினார் கைல் ஜாமிசன்.

எய்டன் மார்கிராமை 15 ரன்னிலும், வான் டெர் டஸ்சனை 8 ரன்னிலும் வெளியேற்றினார் மேட் ஹென்ரி. தனது பங்கிற்கு டிம் சவுத்தி 7 ரன்னில் பவுமாவை வெளியேற்றினார்.

பின்னர் ஹம்சா (25), கைல் வெரேய்ன் (18) ஆகியோரை ஹென்ரி வெளியேற்ற தென்ஆப்பிரிக்கா அணி சரண் அடைய வேண்டிய நிலை ஏற்பட்டது. ரபடா, கிளென்டன் ஸ்டர்மான் ஆகியோரை ரன் ஏதும் எடுக்கவிடாமல் ஹென்ரி வெளியேற்ற 49.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த தென்ஆப்பிரிகா 95 ரன்னில் சுருண்டது. நான்கு பேட்ஸ்மேன்கள் மட்டுமே இரட்டை இலக்க ரன்னைத் தொட்டனர்.

மேட் ஹென்ரி அபாரமாக பந்து வீசி 15 ஓவரில் 23 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகள் சாய்த்தார். டிம் சவுத்தி, கைல் ஜாமிசன், நீல் வாக்னர் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

பின்னர் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. அந்த அணியின் கேப்டன் டாம் லேதம் 15 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஓலிவியர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான வில் யங் 8 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.

அதன்பின் ஜோடி சேர்ந்த டேவன் கான்வே - ஹென்றி நிக்கோலஸ் இணை அபாரமாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. பின் 36 ரன்களில் கான்வே ஆட்டமிழந்தார்.

இதனால் முதல் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 3 விக்கெட்டுகளை இழந்து 116 ரன்களைச் சேர்த்தது. அந்த அணியில் ஹென்றி நிக்கோலஸ் 37 ரன்களுடனும், நீல் வாக்னர் 2 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை