ZIM vs AFG, 3rd ODI: ஜிம்பாப்வேவை ஒயிட்வாஷ் செய்தது ஆஃப்கானிஸ்தான்!
ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஃப்கானிஸ்தான் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இத்தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் ஆஃப்கானிஸ்தான் வெற்றிபெற்று தொடரை வென்றது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று ஹராரேவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீச தீர்மானித்து ஜிம்பாப்வேவை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய ஜிம்பாப்வே அணி ஆரம்பம் முதலே ஆஃப்கானிஸ்தானின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறியது.
அந்த அணியில் இன்னெசண்ட் கையா 16, மதவெரே 5, கிரேக் எர்வின் 0, டியன் மெயர்ஸ் 3, சகாப்வா 15 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறினர்.
பின்னர் ஜோடி சேர்ந்த சிகந்தர் ரஸா - ரியான் பார்ல் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதில் ரஸா 36 ரன்களையும், ரியான் பர்ல் 21 ரன்களையும் சேர்க்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இதனால் 44.5 ஓவர்களில் ஜிம்பாப்வே அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 135 ரன்களை மட்டுமே சேர்த்தது. ஆஃப்கானிஸ்தான் அணி தரப்பில் ரஷித் கான் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
அதன்பின் எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் ரஹ்மனுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
அதனைத் தொடர்ந்து வந்த ரஹ்மத் ஷா 17, நஜிபுல்லா ஸத்ரான் 9 ரன்களிலும் விக்கெட்டை இழந்தார். அதன்பி ஜோடி சேர்ந்த ஹஸ்மதுல்லா ஷாஹிதி - முகமது நபி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.
இதன்மூலம் 37.4 ஓவர்களில் ஆஃப்கானிஸ்தான் அணி இலக்கை எட்டி 4 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் ஆஃப்கானிஸ்தான் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி ஜிம்பாப்வேவை ஒயிட்வாஷ் செய்தது.