ஜிம்பாப்வேவை வீழ்த்தி டி20 தொடரை வென்றது ஆஃப்கானிஸ்தான்!
ஆஃப்கானிஸ்தான் அணி தற்சமயம் ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் செய்து தற்சமயம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் டி20 போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது ஹராரேவில் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து ஆஃப்கானிஸ்தானை பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ஜிம்பாப்வே அணிக்கு பிரையன் பென்னட் - தியான் மேயர்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் தியான் மேயர்ஸ் 6 ரன்னிலும், பிரையன் பென்னட் 16 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் களமிறங்கிய பிராண்டன் டெய்லரும் 3 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய சிக்கந்தர் ரஸா ஒருபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், மறுபக்கம் களமிறங்கிய ரியான் பார்ல் 10 ரன்னிலும், முனியங்கா 19 ரன்னிலும், தஷிங்கா முசெகிவ 13 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர்.
மேற்கொண்டு 37 ரன்களைச் சேர்த்த கையோடு சிக்கந்தர் ரஸாவும் 37 ரன்களில் விக்கெட்டை இழந்தார். மேற்கொண்டு களமிறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஜிம்பாப்வே அணி 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 125 ரன்களில் ஆல் அவுட்டானது. ஆஃப்கானிஸ்தான் அணி தரப்பில் கேப்டன் ரஷித் கான் 3 விக்கெட்டுகளையும், முஜூர் உர் ரஹ்மான் மற்றும் அப்துல்லா அஹ்மத்ஸாய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகலையும் கைப்பற்றினர்.
பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணிக்கு ரஹ்மனுல்லா குர்பாஸ் - இப்ராஹிம் ஸத்ரான் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் குர்பாஸ் 16 ரன்னிலும், அடுத்து களமிறங்கிய செதிகுல்லா அடல் 8 ரன்னிலும் என விக்கெட்டை இழக்க, பின்னர் வந்த தார்விஷ் ரசூலியும் 17 ரன்களுடன் நடையைக் கட்டினார். அதன்பின் ஸத்ரானுடன் ஜோடி சேர்ந்த அஸ்மதுல்லா ஒமார்சாய் பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் சிறப்பாக செயல்பட்ட இப்ராஹிம் ஸத்ரான் தனது அரைசதத்தைப் பதிவு செய்து அசத்தினார்.
Also Read: LIVE Cricket Score
மேற்கொண்டு இந்த போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த இப்ராஹிம் ஸத்ரான் 7 பவுண்டரிகளுடன் 57 ரன்களையும், அஸ்மதுல்லா ஒமர்ஸாய் 5 பவுண்டரிகளுடன் 25 ரன்களையும் சேர்த்தனர். இதன் மூலம் ஆஃப்கானிஸ்தான் அணி 18 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இம்பாப்வே அணியை வீழ்த்தி வெற்றியைப் பதிவு செய்தார். இந்த வெற்றியின் மூலம் டி20 தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. மேலும் இப்போட்டியில் சிறப்பாக செயல்பட்டு அணியின் வெற்றிக்கு உதவிய ரஷித் கான் ஆட்டநாயகன் விருதை வென்றார்.