வங்கதேசத்தை வீழ்த்தி ஆஃப்கானிஸ்தான் அசத்தல் வெற்றி!
வங்கதேச அணி ஆஃப்கானிஸ்தானுடன் ஐக்கிய அரபு ஆமீரகத்தில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரில் வங்கதேச அணி அபார வெற்றியைப் பதிவு செய்ததுடன், 3-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் வென்றது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நடைபெற்று வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய வங்கதேச அணியில் சைஃப் ஹசன் - தன்ஸித் ஹசன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் தன்ஸித் ஹசன் 10 ரன்னிலும், அடுத்து வந்த நஜ்முல் ஹொசைன் சாண்டோ10 ரன்னிலும் விக்கெட்டை இழக்க, 26 ரன்களை எடுத்த கையோடு சைஃப் ஹசனும் விக்கெட்டை இழந்தார். பின்னர் இணைந்த தாவ்ஹித் ஹிரிடோய் - கேப்டன் மெஹிதி ஹசன் மிராஸ் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் இருவரும் தங்களின் அரைசதங்களைப் பதிவு செய்து அசத்தியதுடன், 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். பின் 56 ரன்களில் தாவ்ஹித் ஹிரிடோய் விக்கெட்டை இழக்க, மெஹிதி ஹசன் மிராஸ் 60 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். பின்னர் களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழக்க, வங்கதேச அணி 48.5 ஓவர்களில் 221 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. ஆஃப்கானிஸ்தான் அணி தரப்பில் ரஷித் கான் மற்றும் அஸ்மதுல்லா ஒமர்ஸாய் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய ஆஃப்கானிஸ்தான் அணிக்கு ரஹ்மனுல்லா குர்பாஸ் - இப்ராஹிம் ஸத்ரான் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இப்ராஹிம் ஸத்ரான் 23 ரன்னில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய செதிகுல்லா அடல் 5 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். மேற்கொண்டு அரைசதம் கடந்து அசத்திய ரஹ்மனுல்லா குர்பாஸ் 50 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் இணைந்த ரஹ்மத் ஷா - கேப்டன் ஹஸ்மதுல்லா ஷாஹிதி இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர்.
Also Read: LIVE Cricket Score
இதில் ரஹ்மத் ஷா அரைசதம் கடந்ததுடன் 50 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த அஸ்மதுல்லா ஒமர்ஸாயும் 40 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். ஒருப்பினும் இறுதிவரை களத்தில் இருந்த ஷாஹிதி 33 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன் மூலம் ஆஃப்கானிஸ்தான் அணி 47.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றது. இப்போட்டியில் சிறப்பாக செயல்பட்ட அஸ்மதுல்லா ஒமர்ஸாய் ஆட்டநாயகன் விருதை வென்றார்.