ஐபிஎல் 2022: வெளியானது முதல் புள்ளிப்பட்டியல்; எந்த அணி முதலிடம்?
ஐபிஎல் 15வது சீசன் கிரிக்கெட் போட்டிகள் கடந்த மார்ச் 26ம் தேதியன்று தொடங்கியது. 10 அணிகள், புதிய அணிகள், புதிய விதிமுறைகள் என விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
அதன்படி அனைத்து அணிகளும் தங்களது முதல் போட்டியை முடித்துவிட்டதால் நடப்பாண்டுக்கான புள்ளிப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் தற்போதைக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தான் முதலிடத்தை பிடித்துள்ளது. 5 அணிகள் தலா ஒரு வெற்றி பெற்ற போதும் ரன் ரேட் அடிப்படையில் ( 3.05 ) ராஜஸ்தானுக்கு முதலிடம் கிடைத்துள்ளது. நேற்று நடைபெற்ற ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இரண்டாவது இடத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 0.914 என்ற ரன் ரேட்டுடனும், 206 ரன்கள் இலக்கை விரட்டி ஆர்சிபிக்கு அதிர்ச்சி தந்த பஞ்சாப் கிங்ஸ் அணி 0.697 என்ற ரன்ரேட்டுடன் 3ஆவது இடத்திலும் இருக்கிறது. 4ஆவது இடத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் 5ஆவது இடத்தில் குஜராத் டைட்டான்ஸ் அணியும் இடம்பெற்றுள்ளது.
ஐபிஎல் தொடரின் மிகவும் வெற்றிகரமான அணிகள் இந்த முறை தொடக்கத்திலேயே பின் தங்கியுள்ளன. 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி 9ஆவது இடத்தையும், 4 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் 7ஆவது இடத்தையும் பிடித்துள்ளது. புதிய கேப்டனுடன் வந்த ஆர்சிபி அணி 8ஆவது இடத்தையும், லக்னோ அணி 6ஆவது இடத்தையும் பிடித்துள்ளது.
கடந்த சீசனில் ஒரு வெற்றியாவது பெற்றுவிட மாட்டோமா என்ற அளவிற்கு மோசமாக இருந்த ஹைதராபாத் அணிக்கு இந்தாண்டு தொடக்கமும் பின்னடைவாகவே உள்ளது. ராஜஸ்தானுடன் 61 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததன் மூலம் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தை பிடித்துள்ளது. இந்த புள்ளிப்பட்டியல் இனி வரும் ஒவ்வொரு போட்டியின் முடிவை பொறுத்தும் மாறும் என்பது குறிப்பிடத்தக்கது.