ஐபிஎல் 2026: ராஜஸ்தான் ராயல்ஸில் தொடரும் சஞ்சு சாம்சன்?

Updated: Wed, Aug 06 2025 19:50 IST
Image Source: Google

Sanju Samson: எதிர்வரும் ஐபிஎல் தொடரில் சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து விலகி வேறு அணிக்கு செல்வார் என்று கூறப்பட்ட நிலையில், தற்சமயம் ராஜஸ்தான் அணி அவரை தக்கவைத்துக்கொள்ள முடிவுசெய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் கடந்த மாதம் நடந்து முடிந்தது. இதில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் இறுதிப்போட்டியில் மோதின. இப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது 6 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பெற்றதுடன், முதல் முறையாக சாம்பியன் பட்டத்தையும் வென்று அசத்தியது. 

அதேசமயம் இத்தொடரில் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாகக் கருதப்பட்ட ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது விளையாடிய 14 போட்டிகளில் 4 வெற்றி, 10 தோல்விகள் ஒரு முடிவில்லை என மொத்தமாக 8 புள்ளிகளை மட்டுமே பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பையும் இழந்து லீக் சுற்றுடன் வெளியேறியது. இந்நிலையில் இந்த சீசனுக்கு பிறகு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் அணியில் இருந்து விலகுவதாக கூறப்பட்டது. 

மேலும் அவரை சென்னை சூப்பர் கிங்ஸ் ஆணி வாங்க ஆர்வம் காட்டியதாகவும், அதற்கு அவரும் சம்மதம் தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இந்த செய்தி குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அத்தகவலின் அடிப்படையில், ராஜஸ்தான் ராயல்ஸ் சஞ்சு சாம்சனை விடுவிக்கும் மனநிலையில் இல்லை என்றும், வரவிருக்கும் சீசனில் மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக மட்டுமே விளையாடுவார் என்றும் கூறப்பட்டுள்ளது. 

இருப்பினும் அடுத்த ஐபிஎல் தொடருக்கு கால அவகாசம் உள்ள நிலையில், இத்தகவல் உண்மையா இல்லையா என்பது தெரிந்துவிடும். முன்னதாக, கடந்த ஐபிஎல் சீசன் சஞ்சு சாம்சனுக்கு சிறப்பானதாக அமையவில்லை. ஏனெனில் அவர் காயம் காரணமாக சில போட்டிகளை தவறவிட்டதுடன், மொத்தமாக 9 போட்டிகளில் 35.62 என்ற சராசரியில் 285 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். மேலும் அவருக்கு பதில் ரியான் பராக் ராயல்ஸ் அணியின் கேப்டனாகவும் செயல்பட்டார்.

Also Read: LIVE Cricket Score

சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ராயல்ஸின் மிக நீண்ட கேப்டனாக இருந்தார் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள். க்டந்த 2021 முதல் 2025 வரை 67 போட்டிகளில் அவர் ராஜஸ்தான் அணிக்கு கேப்டனாக செயல்ப்பட்டுள்ளர். அவரது தலைமையில் 33 போட்டிகளில் வெற்றியையும், 32 போட்டிகளில் தோல்வியையும், இரண்டு போட்டிகள் முடிவில்லாமலும் இருந்துள்ளது. அத்தகைய சூழலில் ராஜஸ்தான் அணி சஞ்சுவுடன் தனது எதிர்காலத்தைப் பார்க்கிறதா இல்லையா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை