பகலிரவு டெஸ்ட்: லபுசக்னே சதம்; ஸ்மித் அரைசதம்!
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 ஆட்டங்களைக் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.
இதில் இரு அணிகளுக்கும் இடையேயான 2ஆவது டெஸ்ட், பகலிரவு ஆட்டமாக அடிலெய்டில் வியாழன் முதல் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. டேவிட் வார்னர் 167 பந்துகளில் 95 ரன்கள் எடுத்து ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
முதல் நாளில் ஆஸ்திரேலிய அணி 89 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் எடுத்தது. லபுசாக்னே 95 ரன்களுடனும் ஸ்மித் 18 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தார்கள்.
இன்று ஆட்டம் தொடர்ந்தபோது 287 பந்துகளில் சதத்தைப் பூர்த்தி செய்தார் லபுஷேன். இதன்பிறகு ராபின்சன் பந்தில் 103 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
அடுத்து களமிறங்கிய ட்ராவிஸ் ஹெட், கமரூன் க்ரீன் ஆகியோரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஆனால் மறுமுனையிலிருந்த கேப்டன் ஸ்மித் சிறப்பாக விளையாடி அரைசதம் கடந்தார்.
இதனால் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்புக்கு 302 ரன்கள் எடுத்துள்ளது. ஸ்மித் 55, அலெக்ஸ் கேரி 5 ரன்களுடன் களத்தில் உள்ளார். இங்கிலாந்து தரப்பில் ஸ்டோக்ஸ் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.