ஐபிஎல் 2022: சிஎஸ்கேவிற்கு மகிழ்ச்சி செய்தி; அணியில் இணையும் ருதுராஜ்!
ஐபிஎல் 15ஆவது சீசன் திருவிழா வரும் மார்ச் 26ஆம் தேதி முதல் மும்பையில் தொடங்கவுள்ளது. மே 29ஆம் தேதி வரை இந்த தொடர் நடைபெறும்.
இந்தாண்டு கூடுதலாக 2 புதிய அணிகள், மெகா ஏலம் என போட்டி முறைகளில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
இன்னும் 2வாரங்கள் கூட இல்லாததால் அனைத்து அணிகளும் தங்களது பயிற்சி முகாம்களை தொடங்கிவிட்டன. நடப்பு சாம்பியனான சென்னை அணி சூரத்தில் உள்ள லால் பாய் மைதானத்தில் பயிற்சி பெற்று வருகின்றனர். தோனியின் தலைமையில் பல வீரர்கள் பயிற்சி பெற்றாலும், ஒரு பின்னடைவு இருந்துக்கொண்டே இருந்தது.
ஏனென்றால் பிளேயிங் 11இல் இடம்பெற வேண்டிய முக்கிய வீரர்களான தீபக் சஹார் மற்றும் ருதுராஜ் கெயிக்வாட் ஆகியோர் பெங்களூரூ தேசிய கிரிக்கெட் அகாடமியில் இணைந்தனர். தீபக் சஹாருக்கு தசைநார் கிழிவும், ருதுராஜுக்கு கையில் உள்காயமும் ஏற்பட்டிருந்தது. இதனால் என்சிஏவில் உடற்தகுதியை நிரூபித்தால் மட்டுமே ஐபிஎல்-ல் பங்கேற்க அனுமதி என பிசிசிஐ கிறுக்குப்பிடி போட்டது.
இதனால் அணி நிர்வாகம் மற்றும் ரசிகர்கள் பதற்றத்தில் இருந்த நிலையில் மகிழ்ச்சி செய்தி ஒன்று கிடைத்துள்ளது. தொடக்க வீரர் ருதுராஜ் கெயிக்வாட் தனது உடற்தகுதியை நிரூபித்துவிட்டார். இதனால் பெங்களூருவில் இருந்து சூரத்திற்கு தற்போது பறந்துள்ளார். இன்று மாலைக்குள் சிஎஸ்கே பபுளுக்குள் சென்றுவிடுவார்.
இது ஒருபுறம் இருக்க சஹாரின் நிலைமை இன்னும் கவலையாகவே உள்ளது. குறைந்தது ஒன்றரை மாதம் ஓய்வெடுக்க வேண்யிருக்கும் என முன்பே கணிக்கப்பட்டது. அதன்படி தற்போது ருதுராஜ் மட்டும் சூரத்திற்கு செல்வதால் தீபக் சஹாரின் பங்கேற்பு இருக்குமா என்ற சந்தேகம் வலுத்துள்ளது.