ருதுராஜ் கெய்க்வாட் அபார சதம்; தென் ஆப்பிரிக்க ஏ அணியை வீழ்த்தியது இந்தியா ஏ!

Updated: Thu, Nov 13 2025 21:46 IST
Image Source: Google

தென் ஆப்பிரிக்க ஏ அணி தற்சமயம் இந்திய ஏ அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று ராஜ்கோட்டில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க ஏ அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. 

அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் ருபின் ஹர்மான், ரிவால்டோ முன்சாமி, ஜோர்டன் ஹர்மான், கேப்டன் அக்கர்மேன் உள்ளிட்டோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். பின்னர் ஜோடி சேர்ந்த டியான் ஃபோர்ரெஸ்டர் - டெலனோ போட்ஜீட்டர் இணை அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன், இருவரும் தங்களின் அரைசதங்களையும் பதிவு செய்து அசத்தினார். 

இதில் போர்ரெஸ்டர் 4 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் என 77 ரன்களில் விக்கெட்டை இழக்க, சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட போட்ஜீட்டரும் 10 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 90 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மேற்கொண்டு களமிறங்கிய வீரர்களில் பிஜோர்ன் ஃபோர்டுயின் 59 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். 

இதன் மூலம் தென் ஆப்பிரிக்க ஏ அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 285 ரன்களைச் சேர்த்தது. இந்திய ஏ அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ரானா தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய இந்திய ஏ அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட் - அபிஷேக் சர்மா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 64 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர். 

இதில் அபிஷேக் சர்மா 31 ரன்களுடன் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ரியான் பராக் 8 ரன்களுடை நடையைக் கட்டினார். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் திலக் வர்மாவும் 39 ரன்களை மட்டுமே சேர்த்து ஆட்டமிழந்தார். ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்த நிலையில், மறுமுனையில் அபாரமாக விளையாடி வந்த ருதுராஜ் கெய்க்வாட் சதமடித்து அசத்தினார். 

பின்னர் 12 பவுண்டரிகளுடன் 117 ரன்களைச் சேர்த்த நிலையில் ருதுராஜ் கெய்க்வாட்டும் ஆட்டமிழக்க, அவருடன் இணைந்து விளையாடி வந்த இஷான் கிஷான் 17 ரன்களுடன் நடையைக் கட்டினார். அதன்பின் ஜோடி சேர்ந்த நிதிஷ் ரெட்டி - நிஷாந்த் சந்து இணை அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர். இதில் அதிரடியாக விளையாடிய நிதிஷ் ரெட்டி 37 ரன்களையும், நிஷாந்த் ஷந்து 29 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தனர். 

Also Read: LIVE Cricket Score

இதன் மூலம் இந்திய ஏ அணி 49.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க ஏ அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவு செய்து அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய ஏ அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையும் வகிக்கிறது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை