கரோனா தொற்றிலிருந்து மீண்ட ஹஸ்ஸி!
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளருமான மைக் ஹஸ்ஸி. இவருக்கு சமீபத்தில் ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் தொடரின் போது கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து மருத்துவ விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மேலும் சமீபத்தில் இவருக்கு மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையின் முடிவில் மீண்டும் தொற்று இருப்பது உறுதியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்நிலையில், இன்று இவருக்கு மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையில் தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது. இத்தகவலை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை நிர்வாக அலுவலர் காசி விஸ்வநாதன் உறுதி செய்துள்ளார்.
இதுகுறித்து பேசிய காசி விஸ்வநாதன், “மைக் ஹஸ்ஸி கரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ளார். ஆனால் அவரை எப்படி ஆஸ்திரேலியா அனுப்புவது என்பதை தீவிரமாக ஆலோசித்து வருகிறோம். ஏனெனில் மாலத்தீவில் தடை நீடிப்பதால், அது குறித்த ஆலோசனையில் இறங்கியுள்ளோம். எப்படியானாலும் இந்த வார இறுதிக்குள் அவர் தனது சொந்த நாட்டிற்கு திரும்புவார்” என தெரிவித்துள்ளார்.
சிஎஸ்கே அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸி கரோனா தொற்றிலிருந்து குணமடைந்து உள்ளது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.