பிபிஎல் 2022: கேமரூன் பாய்ஸ் ஹாட்ரிக் வீண்; சிட்னி தண்டர் த்ரில் வெற்றி!
பிக் பேஷ் லீக் டி20 தொடரில் இன்று நடைபெற்ற 55ஆவது லீக் ஆட்டத்தில் சிட்னி தண்டர் - மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நத்தின. இதில் டாஸ் வென்ற ரெனிகேட்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய தண்டர் அணிக்கு உஸ்மான் கவாஜா - அலெக்ஸ் ஹேல்ஸ் இணை அபாரமான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்தனர்.
இதில் 44 ரன்களைச் சேர்த்த அலெக்ஸ் ஹேல்ஸ் அரைசதத்தை தவறவிட, மறுமுனையிலிருந்த உஸ்மான் கவாஜா அரைசதம் கடந்து அசத்தினார். ஆனால் அடுத்து களமிறங்கிய வீரர்கள் கேமரூன் பாய்ஸின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
இதில் கேமரூன் பாய்ஸ் தொடர்ச்சியாக 4 பந்துகளில் நான்கு விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் தண்டர் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்களைச் சேர்த்தது.
இதில் அதிகபட்சமாக உஸ்மான் கவாஜா 77 ரன்களைச் சேர்த்தார். ரெனிகேட்ஸ் அணி தாரப்பில் கேமரூன் பாய்ஸ் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
அதன்பின் இலக்கை துரத்திய ரெனிகேட்ஸ் அணியில் ஜேம்ஸ், ஷான் மார்ஷ், உன்முக்த் சந்த், மெர்லோ ஆகியோர் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுமுனையில் அதிரடியாக விளையாடிய ஆரோன் ஃபிஞ்ச் அரைசதம் கடந்து அசத்தினார்.
அதன்பின் 82 ரன்களில் ஃபிஞ்சும் ஆட்டமிழக்க, பின்ன வந்த வீரர்களும் சொதப்பினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணியால் 7 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது.
இதன்மூலம் சிட்னி தண்டர் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் மெல்போர்ன் ரெனிகேட்ஸை வீழ்த்தி த்ரில் வெற்றிபெற்றது.