மகளிர் பிக் பேஷ்: பிரிஸ்பேனை வீழ்த்தி சிட்னி அணி த்ரில் வெற்றி!
ஆஸ்திரேலியாவின் உள்ளூர் டி20 தொடர்களில் ஒன்றான மகளிர் பிக் பேஷ் டி20 தொடரின் எட்டாவது சீசன் நேற்று முதல் தொடங்கியுள்ளது. இத்தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் பிரிஸ்பேன் ஹீட் மகளிர் அணி, சிட்னி சிக்சர்ஸ் மகளிர் அணியை எதிர்கொண்டது.
இப்போட்டியில் டாஸ் வென்ற சிட்னி சிக்சர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய பிரிஸ்பேன் ஹீட் அணியில் ஜார்ஜியா ரெட்மெய்ன் அதிரடியான தொடக்கத்தைக் கொடுக்க, மறுமுனையில் களமிறங்கிய கிரேஸ் ஹாரிஸ் ஒரு ரன்னுடன் பெவிலியன் திரும்பினார்.
அதன்பின் ரெட்மெய்னுடன் ஜோடி சேர்ந்த ஜார்ஜியா வோல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினார். பின் இப்போட்டியில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரெட்மெய்ன் 49 ரன்களிலும், ஜார்ஜியா 32 ரன்களோடும் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டனர்.
அதன்பின் களமிறங்கிய மற்ற வீராங்கனைகள் வந்த வேகத்தில் பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் பிரிஸ்பேன் ஹீட் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்களை மட்டுமே எடுத்தது. சிட்னி அணி தரப்பில் மைத்லான் பிரௌன் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையடுத்து இலக்கை நோகி களமிறங்கிய சிட்னி சிக்சர்ஸ் அணியின் தொடக்க வீராங்கனைகள் அலிசா ஹீலி, சூஸி பேட்ஸ் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அவர்களைத் தொடந்து வந்த அஷ்லே கார்ட்னரும் 2 ரன்களுக்கு நடையைக் கட்டினார்.
பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் எல்லிஸ் பெர்ரி - எரின் பர்ன்ஸ் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தனர். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் கடக்க, 19.5 ஓவர்களில் சிட்னி அணி இலக்கையும் எட்டியது.
இதன்மூலம் சிட்னி சிக்சர்ஸ் மகளிர் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் பிரிஸ்பேன் ஹீட் மகளிர் அணியை வீழ்த்தி தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது.