IN-W vs AU-W, 2nd ODI: ஸ்மிருதி மந்தனா அபார சதம்; ஆஸியை பந்தாடியது இந்தியா!

Updated: Wed, Sep 17 2025 20:58 IST
Image Source: Google

India Women vs Australia Women 2nd ODI: ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா சதமடித்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்ததுடன், ஆட்டநாயகி விருதையும் வென்றனர். 

ஐசிசி மகளிர் உலகக் கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் ஆஸ்திரேலிய மகளிர் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் தொடரில் விளையாடி வ்ருகிறது. தொடரின் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்ற நிலையில், இந்திய மகளிர், ஆஸ்திரேலிய மகளிர் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. சண்டிகரில் உள்ள மகாராஜா யதவீந்திர சிங் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு ஸ்மிருதி மந்தனா அபாரமான தொடக்கத்தை வழங்கினார். அதேசமயம் மறுபக்கம் பிரதிகா ராவல் 25 ரன்களிலும், ஹர்லீன் தியோல் 10 ரன்களிலும், கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 17 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுமுனையில் அபாரமாக விளையாடி 72 பந்துகளில் சதமடித்து அசத்தினார். இதன் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக சதமடித்த இந்திய வீராங்கனை எனும் சாதனையையும் படைத்தார்.

பின்னர் தொடர்ந்து அபாரமாக விளையாடி வந்த மந்தனா 14 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் என 117 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய வீராங்கனைகளில் தீப்தி சர்மா 40 ரன்களையும், ரிச்சா கோஷ் 29 ரன்களையும், ஸ்நே ரானா 24 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீராங்கனைகள் சோபிக்க தவறினர். இதனால் இந்திய அணி 49.5 ஓவர்களில் 292 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் டார்சி பிரௌன் 3 விக்கெட்டுகளையும், ஆஷ்லே கார்ட்னர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணியில் ஜார்ஜியா வோல் ரன்கள் ஏதுமின்றியும், கேப்டன் அலிசா ஹீலி 9 ரன்னிலும், பெத் மூனி 18 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் இணைந்த எல்லிஸ் பெர்ரி - அனபெல் சதர்லேண்ட் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் எல்லிஸ் பெர்ரி 44 ரன்னிலும், அனபெல் சதர்லேண்ட் 45 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் களமிறங்கிய வீராங்கனைகளும் இந்தியாவின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.

Also Read: LIVE Cricket Score

இதனால் ஆஸ்திரேலிய மகளிர் அணி 40.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 190 ரன்களைச் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் கிராந்தி கௌட் 3 விக்கெட்டுகளையும், தீப்தி சர்மா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன் மூலம் இந்திய மகளிர் அணி 102 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய மகளிர் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றதுடன், ஒருநாள் தொடரையும் 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது. இப்போட்டியில் சதமடித்து அசத்திய ஸ்மிருதி மந்தனா ஆட்டநாயகி விருதை வென்றார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை